Images
  • video
     STOMP பதிவேற்றிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

மண்டியிட்ட சிறுமியை அறைந்த ஆடவர் - காவல்துறை விசாரணை

தம்பனீசில் உள்ள IKEA கடைத்தொகுதியின் கார் நிறுத்துமிடத்தில் மண்டியிட்டிருந்த சிறுமியை ஆடவர் ஒருவர் அறையும் காணொளி குறித்து காவல்துறையும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் விசாரணை மேற்கொண்டுவருகின்றன.

இணையத்தில் பரவிவரும் காணொளி பலரின் சினத்தைத் தூண்டியிருக்கிறது.

அண்மையில் இணையப்பக்கம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், சிறுமி வெள்ளைக் கார் ஒன்றின் அருகே மண்டியிட்டிருப்பதைக் காணமுடிகிறது. சிறுமியைப் பார்த்து ஆடவர் கத்துவதும் பின்னர் சிறுமியை ஆடவர் தாக்குவதும் காணொளியில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஆடவரின் தாக்குதலால் நிலைகுலைந்து சிறுமி தடுமாறி விழுகிறார்.

சம்பவத்தின்போது அவ்விருவருடன் ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார்.

"இதுவே இறுதிமுறை" என்று ஆடவர் கத்திக்கொண்டே சற்றுதொலைவு சென்றபிறகு, சிறுமியை ஒழுங்காக மண்டியிடும்படி கட்டளையிட்டிருக்கிறார்.  

காணொளி அதன் கடைத்தொகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் பதிவுசெய்யப்பட்டது என்பதை IKEA நிறுவனம், சேனல் நியூஸ் ஏஷியாவிடம் உறுதிப்படுத்தியது.

காவல்துறையிடம் அது குறித்துப் புகார் அளித்திருப்பதாகவும் IKEA சொன்னது.


Top