Images
  • suvar

வீட்டுக்குள் இருக்கும் வேளையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்ட குடும்பம்

சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பில் இருப்பதால் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல முடிகிறது.

வீட்டில் அதிக நேரம் செலவிடுவதால் பல பேர் சமைக்கக் கற்றுக் கொண்டனர், புதுக் கலையைப் பற்றித் தெரிந்து கொண்டனர், புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் வித்தியாசமாக யோசித்தது.
ஓவியம் மூலம் வீட்டுச் சுவருக்கு
அழகு சேர்க்கலாமே...வீட்டை அலங்கரித்தது போலவும் இருக்கும்...பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டதைப் போலவும் இருக்கும் என்ற யோசனை வந்தது.

"பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த மனைவியிடம் யோசனைக் கேட்டேன். மனைவி சுவரில் ஓவியம் வரைந்தால் என்ன ? என்று சொல்ல ஓவியம் தொடங்கப்பட்டது"

என்று கூறுகிறார் திரு. கண்ணா கண்ணப்பன்.

திரு கண்ணாவின் மனைவி மகாலட்சுமிக்குக் கலையில் ஆர்வம். பிள்ளைகளுக்கு வண்ணம் தீட்டுவதும், வரைவதும் பிடித்தமான பொழுதுபோக்கு.

ஓவியம் தொடர்பாக தமது இரண்டு குழந்தைகளிடம் பேசியதாகவும் அதன் பிறகு அவர்களுக்குப் பிடித்த கருப்பொருள்களைக் குழந்தைகள் கூற ஓவியம் தயாரானது என்றார் அவர்.

ஓவியத்தில் குழந்தைகளின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் சில இடங்கள் வண்ணம் பூசக் கொடுக்கப்பட்டதாகத் திரு. கண்ணா கண்ணப்பன் கூறினார்.


இதுபோன்ற தருணங்களில் குடும்பத்துடன் ஒற்றுமையாக நேரம் செலவிடுவது மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறை ஓவியத்தைப் பார்க்கும்போதும் குடும்ப ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதாகத் திரு கண்ணா தெரிவித்தார்.




 

Top