Images
  • water johor
    (படம்: AFP/ROSLAN RAHMAN)

தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் உரிமையை மலேசியா இழந்துவிட்டது என்பதில் சிங்கப்பூர் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

1962 ஒப்பந்தத்தின்கீழ் தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் உரிமையை மலேசியா இழந்துவிட்டது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசிய வெளியுறவு அமைச்சர் நேற்று கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சு, தண்ணீரின் விலை தொடர்பான மறுஆய்வு எதுவும் இடம்பெறவில்லை என்றது.

கடந்த நவம்பர் மாதம், பிரதமர் லீ சியென் லூங்கும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதும் நடத்திய சந்திப்பின்போது விலையை மறுஆய்வு செய்வதன் தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இரண்டு தரப்பும் ஒன்று மற்றதன் நிலையைப் புரிந்துகொள்வதற்கு அதிகாரிகள் மேற்கொண்டு கலந்துபேசவேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதற்காகச் சென்ற டிசம்பரில் இரண்டு நாடுகளின் தலைமைச் சட்ட அதிகாரிகளும் சந்தித்தனர்.

ஆனால் அப்போது அவர்கள் ஆகாயவெளி, கடல்துறை சர்ச்சையில் அதிகக் கவனம் செலுத்தியதால் தண்ணீர் ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பேசவில்லை.

இரு தரப்பினரும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

இரண்டு தரப்புக்கும் ஏற்புடைய நிபந்தனைகளின் அடிப்படையில் அனைத்துலக நடுவர் மன்றத்தின்வழி பூசல்களுக்குத் தீர்வுகாண சிங்கப்பூர் எப்போதுமே தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.  

Top