Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வியாபாரமும் குறைவு, மக்கள் நடமாட்டமும் குறைவு. அரசாங்கம் செய்யும் உதவி ஓரளவுக்குக் கைகொடுக்கும்' - ஈரச்சந்தைக் கடைக்காரர்கள்

'வியாபாரமும் குறைவு, மக்கள் நடமாட்டமும் குறைவு. அரசாங்கம் செய்யும் உதவி ஓரளவுக்குக் கைகொடுக்கும்' - ஈரச்சந்தைக் கடைக்காரர்கள்

வாசிப்புநேரம் -

தேசியச் சுற்றுப்புற அமைப்பு நிர்வகிக்கும் ஈரச்சந்தைகளைச் சேர்ந்த சுமார் 7,000 கடைக்காரர்களுக்கு ஒரு மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்று வியாழக்கிழமை (ஜூன் 10) அறிவிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகளால் சந்தைக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், செலவுகளை ஈடுகட்ட அந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்: Ili Mansor/TODAY

அது, கிருமிப்பரவலின் தாக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறுகிறார், தேக்கா ஈரச்சந்தையில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் திரு. விஜய ராகவன்.

தற்போதைய நிச்சயமற்ற சூழலில், வியாபாரம் சரிந்துள்ளது. அந்தத் தாக்கத்திலிருந்து மீள, ஒருமாத வாடகைத் தள்ளுபடி உதவும்.

என்றார் GV Meat Distributors நிறுவனத்தின் திரு. ராகவன்.

வியாபாரமும் குறைவு, மக்கள் நடமாட்டமும் குறைவு...இறைச்சி போன்ற உணவுப் பொருள்கள் விரைவில் காலாவதியாகக்கூடியவை. அவற்றை நீண்ட நாள்களுக்கு வைத்திருக்க முடியாது.

எனத் திரு. ராகவன் குறிப்பிட்டார்.

படம்:  Try Sutrisno Foo

தேக்கா ஈரச்சந்தையில் PK Fish என்ற மீன் கடை வைத்திருக்கும் கிஷா நாயுடுவும், தற்போதைய சூழலில் செலவு அதிகமாகவே இருப்பதாகக் கூறினார்.

குறிப்பாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட முதல் 2 வாரங்களின்போது, வியாபாரம் கணிசமாய் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அப்போது மாத இறுதி என்பதால், பலரும் ஈரச்சந்தைக்கு வருவதில்லை. வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்தும் வியாபாரம் குறைந்துவிட்டது.

ஆனால், அதற்கடுத்த 2 வாரங்கள், மாதத் தொடக்கம் என்பதால், பலரும் சம்பளம் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. அதனால், வியாபாரம் சற்று மேம்பட்டது.

என்றார் குமாரி கிஷா.

Haji MN shahul hameed காய்கறிக் கடையைச் சேர்ந்த திரு. மணிகண்டன், இணைய வழி வியாபாரம் தங்களுக்குச் சரிவராது என்றார்.

வாடிக்கையாளர்கள் எப்போதும் புதிய காய்கறிகளை வாங்க விரும்புவார்கள் என்பதால், அவர்கள் கடைக்கு நேரடியாகச் செல்ல எண்ணுவார்கள்

என்று அவர் சொன்னார்.

படம்: தேசியச் சுற்றுப்புற வாரியம் 

மலேசியாவில் நீடிக்கும் முடக்கநிலையால் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதாய்க் கூறிய திரு. மணிகண்டன், ஒரு மாத வாடகைத் தள்ளுபடி, செலவுகளை ஈடுகட்டுவதற்கு ஓரளவு உதவும் என்று சொன்னார்.

ஒரு மாத வாடகைத் தள்ளுபடி அளிக்கப்பட்டாலும், அது செலவுகளில் ஒரு பங்கைத்தான் குறைப்பதாக ஈரச்சந்தையில் கடை வைத்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

கடைக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் உதவி வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று MA. Osman இறைச்சிக் கடையைச் சேர்ந்த திரு. அலி சப்ரி குறிப்பிட்டார்.

கூட்டம் குறைவு... செலவு அதிகம். விமானம் வழி கொண்டு வரப்படும் இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. இணைய வர்த்தகம் வழி, அதை ஈடுகட்ட முடியவில்லை. இந்நிலையில், ஊழியர்களையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு மாத வாடகைத் தள்ளுபடி, அனைத்து இழப்பையும் செலவுகளையும் ஈடுகட்ட உதவாது... ஆனால் அரசாங்கம் செய்யும் சிறு உதவியும் உதவியே

என்று அவர் சொன்னார்.

நிலைமை சீரானால்தான், வியாபாரமும் சூடு பிடிக்கும், இழப்புகளையும் ஈடுகட்டலாம் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்