Images
  • crime (2)
    கோப்புப் படம்: Jeremy Long

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை?

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, அவர்கள் 14 நாள்கள், எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் 'வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு'களை இதுவரை 21,000க்கும் அதிகமானோருக்குப் பிறப்பித்திருக்கிறது.

குறுந்தகவல், அழைப்புகள், நேரடியாக வீடுகளுக்கே செல்வது ஆகியவற்றின் மூலம் உத்தரவு பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.

உத்தரவை மீறுவோர், தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம் பிரிவு 21A-இன் கீழ் தண்டிக்கப்படுவர்.

அவர்களுக்கு 10,000 வெள்ளிவரை அபராதமோ, 6 மாதச் சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

நிரந்தரவாசத் தகுதியில் இருப்போர், நீண்டகால அனுமதி வைத்திருப்போர், சார்ந்திருக்கும் அனுமதி, மாணவர் அனுமதி, வேலை அனுமதியில் இருப்போர் உத்தரவை மீறினால், அவர்களது அனுமதிக்காலம் குறைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

உத்தரவு பெறுவதைத் தவிர்க்கப், பயணம் செய்த இடங்கள் குறித்துப் பொய்த் தகவல் அளிப்போரும் சட்டப்படி தண்டிக்கப்படுவர்.

அதற்கும் சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

நாளை மறுநாள் முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைவரும், சுகாதார விவரங்கள் அடங்கிய படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
அவர்கள் ஆபத்து அதிகமுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனரா என்பதைக் கண்டறிய சுகாதார அதிகாரிகளுக்கு அது உதவும்.

உத்தரவுகளின் தொடர்பில் அரசாங்கம் கடுமையான விதிமுறைகளையும், உறுதியான அமலாக்க நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாய் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 

Top