Images
  • mom
    (படம்: MOM)

வேலையில் வெளிநாட்டவருக்கு முன்னுரிமை தரும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரில் வேலையிடப் பாகுபாட்டைக் களையும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, வேலை வாய்ப்பில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை தராமல் வெளிநாட்டவருக்கு முன்னுரிமை தரும் நிறுவனங்கள் புதிய வேலை அனுமதி அட்டைகளுக்கு விண்ணப்பிக்க, தற்காலிகத் தடை விதிக்கப்படும்.

ஓராண்டு முதல் ஈராண்டுகள்வரை அந்தத் தடை நீடிக்கக்கூடும்.

மனிதவள அமைச்சர் ஜோஸஃபின் தியோ, மென்பொருள் நிறுவனமான Salesforceக்கு சென்றிருந்தபோது திருத்தப்பட்ட நடைமுறைகள் குறித்து அறிவித்தார்.

சிங்கப்பூரர்களைப் பாகுபடுத்தும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தடைக்காலம் இதுவரை 6 மாதங்களாக இருந்தது.

அது இனி அதிகரிப்பதோடு, ஏற்கனவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வேலை அனுமதி அட்டைகளும் புதுப்பிக்கப்பட மாட்டா.

முன்னதாக, பழைய வேலை அனுமதி அட்டைகளைப் புதுப்பித்துக்கொள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன.

முதலாளிகள் சிங்கப்பூரில் வர்த்தகத்தைத் தொடரவிரும்பினால், அவர்கள் சிங்கப்பூரர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டுமென்பதைத் திருமதி தியோ வலியுறுத்தினார்.

புதிய மாற்றம் இந்த மாதம் நடப்புக்கு வந்ததிலிருந்து இதுவரை 5 நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன.

Nihon Premium மருந்தகம், Meyer Burger, Tarantula Global Holdings, Meow Services, Ti2 Logistics ஆகியவை அந்த நிறுவனங்கள்.

வெளிநாட்டவரை வேலையில் அமர்த்தும்நோக்கில், தவறாகத் தகவல் அளித்த Ti2 Logistics நிறுவனத்தின் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

        

Top