Images
  • work
    (படம்: Channel NewsAsia)

அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற இருவரின் வேலை அனுமதி ரத்து

சிங்கப்பூருக்குள் முன் அனுமதியின்றி நுழைய முயன்ற இருவரின் வேலை அனுமதியை ரத்து செய்வதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளுக்கு வேலை அனுமதியின் தொடர்பில் வழங்கப்பட்ட சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சு சொன்னது.

மனிதவள அமைச்சு சிங்கப்பூருக்குள் நுழைய விதித்திருந்த விதிமுறைகளை அவர்கள் மீறியதே அதற்குக் காரணம்.

வேலை அனுமதியில் சிங்கப்பூரில் பணிபுரிவோர், தலைநிலச் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்து, இந்த மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு இங்கு திரும்பத் திட்டமிருந்தால், பயணம் மேற்கொள்வதற்கு முன், அவர்கள் மனிதவள அமைச்சின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

இரு ஊழியர்களும் 11ஆம் தேதி பிப்ரவரி சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஊழியர்களைக் கட்டம் கட்டமாகத் திரும்ப அழைத்துவர மனிதவள அமைச்சு திட்டமிடுவதால், அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஊழியர்கள் சீனாவிலிருந்து கிளம்புவதற்கு 12 மணிநேரம் முன்னதாகவே அது குறித்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் நேற்று முன் தினம், சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.

அவர்களை 24 மணிநேரத்துக்குள் திருப்பி அனுப்பும்படி முதலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இனி சிங்கப்பூருக்குள் நுழைய நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டது.

அவர்களின் நிறுவனங்கள், வேலை அனுமதியின் தொடர்பில் பெறும் சலுகைகளை ஓராண்டுக்குத் தற்காலிகமாக ரத்து செய்வதாகவும் அமைச்சு சொன்னது.


 

Top