Images
  • zamzam boss
    கோப்புப் படம்: TODAY/Yong Jun Yuan

பிணையில் இருந்தபோது குற்றம் புரிந்ததாகச் சந்தேகம் -Zam Zam உணவக முன்னாள் உரிமையாளர் தடுப்புக் காவலில்

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள பிரபல ஸம் ஸம் (Zam Zam) உணவகத்தின் முன்னாள் உரிமையாளர் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஸாகீர் அப்பாஸ் கான் மீது முரட்டுத்தனமாக நடந்துகொண்டது, மிரட்டியது ஆகியவை தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனது உணவகத்துக்கு அருகில் இருந்த விக்டரி உணவகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தாக்க குண்டர்களை ஏவிய குற்றத்துக்காக அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைக் குறைக்குமாறு அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

கான் அந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தற்போது மேலும் இரு குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 24ஆம் தேதி, 719 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் திரு அமீர் நோர்மான் ஹலிம் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாய் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே நாளில், திரு அமீரை நோக்கி முரட்டுத்தனமாகக் காரைச் செலுத்தி அவரை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கான், தமக்கு 5 சிறு பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னார்.

தம் மீது தவறாகக் குற்றஞ்சாட்டப்படுவதாகவும், தாம் எந்தக் குற்றமும் புரியவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

தாம் இதயக் கோளாற்றால் சிரமப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவருக்குப் பிணை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். கான் மீதான வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்குவரும்.  

Top