Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் : எதிர்காலத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தும்

சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தும்- வரவுசெலவுத் திட்டம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு. தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தும்- வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். நம் பொருளியல் அடுத்த எல்லையை எட்டவேண்டும் என்றார் அவர். புத்தாக்கத்தைத் துணைகொண்டு நிறுவனங்கள் முன்னேற்றம் காணவேண்டும். ஒவ்வொரு வேலையிலும் மேம்பட்ட திறன், நிபுணத்துவ அடிப்படையில், வருமானங்கள் அதிகரிக்கவேண்டும்.  நியாயமான நேர்மையான சமுதாயம் உருவாவதை உறுதிசெய்யவேண்டும். எங்கு தொடங்குகிறோம் என்ற அடிப்படையில்- அல்லாமல், ஒவ்வொருவரும் முன்னேறி நன்றாகச் செயல்பட வாய்ப்புகள் இருக்கும். தனிநபர்களின் முயற்சி,  பொறுப்பு ஆகியவற்றோடு வலுவான கூட்டுப் பொறுப்பும் முக்கியம். குறிப்பாக முதியோருக்கு அது அவசியம். அந்தத் தொலைநோக்கை அடைய இந்த வரவுசெலவுத் திட்டம், நான்கு அம்சங்களில் முக்கிய கவனம் செலுத்தும் என்று திரு. தர்மன் கூறினார்.


முதலில், எதிர்காலத்துக்குத் தேவையான திறன்களில் அரசாங்கம் முதலீடு செய்யும். ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுதும், கற்றலில் ஈடுபட்டு மேம்படுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் அல்லாமல்,  திறன்தகுதிக்கு முக்கியத்துவம் தரும் நாடாக சிங்கப்பூர் இருக்கவேண்டும். மக்கள் தொடர்ந்து கற்று, ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளும் சமுதாயமாக அது இருக்கவேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், அனைவரும் அவர்களின் பங்களிப்புக்காக மதிக்கப்பட வேண்டும். அனைத்துலக அளவில் போட்டிபோடுவதற்கு, அது மிகவும் முக்கியம் என்பதைத் திரு. தர்மன் வலியுறுத்தினார். வேலைகள், புதிய தொழில்நுட்பங்களால் உருமாறிவருகின்றன. சிங்கப்பூர், ஒவ்வொரு துறையிலும்  நிபுணத்துவத்தையும் மேம்பட்ட ஆற்றலையும் எட்டமுடியாது என்பதை நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே வலுப்பெற்ற அம்சங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். தேவைகள் அதிகரித்துவரும்- துறைகளில் கவனம் செலுத்தவேண்டும். சிங்கப்பூரர்கள் திறம்படச் செயலாற்றுவதற்கு- ஏற்ற துறைகளையும் கவனிக்கவேண்டும். இவற்றைக் கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் வளர்ச்சிகாணக்கூடிய ஐந்து குழுமங்களை, அவர் அடையாளம்-காட்டினார். மேம்பட்ட உற்பத்தி, பயன்முறை சுகாதார அறிவியல், அறிவார்ந்த-நீடித்து-நிலைத்திருக்கக்கூடிய நகரமயத்துக்கான தீர்வுகள், தளவாடம் மற்றும் ஆகாயவெளி, ஆசிய-உலக நிதிச் சேவைகள் ஆகியவையே அவை. 


இரண்டாவதாக, பொருளியல் தொடர்ந்து சீரமைக்கப்பட வேண்டும் என்றார் திரு. தர்மன். அடுத்த தலைமுறை நிறுவனங்கள் வெற்றிபெறுவதற்கு ஆதரவளிக்கவேண்டும். புத்தாக்கத்தையும் அனைத்துலகமயத்தையும் ஊக்குவிக்கவேண்டும். எதிர்காலத்துக்கான பொருளியல், சமுதாய உள்ளமைப்புகளில் முதலீடுகள் செய்யப்படும் என்று திரு. தர்மன் கூறினார். ஓய்வுகாலத்துக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வலுப்படுத்தும் என்று திரு. தர்மன் தெரிவித்தார். முன்னோடித் தலைமுறைத் திட்டத்துக்கும் மற்ற சமூகத் திட்டங்களுக்கும் அது  உறுதுணையாக இருக்கும் என்றார் அவர். நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கான ஆதரவும் மேம்படுத்தப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்