Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீக்கு சிண்டா ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்ச்சி

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இனத்தவரும், அவரவர் பண்பாட்டு இயல்புகளைப் பேணும் அதேவேளையில், உறுதியான சகிப்புத் தன்மையும் அவர்களுக்குத் தேவை என்பது, திரு, லீ குவான் இயூவின் நம்பிக்கை. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இனத்தவரும், அவரவர் பண்பாட்டு இயல்புகளைப் பேணும் அதேவேளையில், உறுதியான சகிப்புத் தன்மையும் அவர்களுக்குத் தேவை என்பது, திரு, லீ குவான் இயூவின் நம்பிக்கை. சிண்டாவின் ஏற்பாட்டில், நூற்று ஐம்பதுக்கும் அதிகமான இந்திய அமைப்புகள் ஒன்றாக இணைந்து, இன்று மாலை நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில், அந்தக் கருத்து நினைவுகூரப்பட்டது.

PGP திருமண அரங்கில், 500-க்கும் மேற்பட்டோர் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திரு. லீ குவான் இயூவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு அது தொடங்கியது. துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. எஸ். ஈஸ்வரன், சட்டம், கல்வித் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் குமாரி இந்திராணி ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரிலுள்ள இந்திய சமூகம் இன்றிருக்கும் உன்னத நிலைக்கு, திரு. லீ-யின் பாரபட்சமற்ற கொள்கைகளே காரணம் என்ற கருத்தை, அங்கு வந்திருந்தோர் வலியுறுத்தினர்.

 பொதுத் தூதர் திரு. கோபிநாத் பிள்ளை, இருமொழிக் கொள்கை, ஆங்கில வழிக் கல்வி ஆகியவற்றின் அருமை கருதியே, தமது மலேசிய மனைவியோடு, அந்தக் காலத்தில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்ததாகக் குறிப்பிட்டார். திரு. லீ விதைத்த இருமொழிக் கொள்கையின் பலன்களை, ஒவ்வொரு நாளும் அறுவடை செய்து வருவதாகக் கூறினர் பலர்.

திரு. லீ குவான் இயூவின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும் படக் காட்சி, வந்திருந்த பலரின் கண்களைப் பனிக்கச் செய்தது. இந்திய சமூகம் இந்த நாட்டுக்கு ஒரு சுமையாக இல்லாமல், மதிப்புமிக்க பங்காளியாக இருக்க வேண்டுமென்பதில், திரு. லீ உறுதியாக இருந்தார். இது, அனைத்துத் தரப்பினரின் மனத்திலும் ஆழமாகப் பதிந்திருப்பதைக் காண முடிந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்