Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 6 - அரசமைப்புச் சட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கையும்

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை பற்றிய பேச்சு தொடங்கியதும் முதலில் பொதுவாக எல்லாருக்கும் தோன்றியது மலாய்க்காரர் ஒருவர் அதிபராகி நெடுங்காலம் ஆகிவிட்டது.  

வாசிப்புநேரம் -

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை பற்றிய பேச்சு தொடங்கியதும் முதலில் பொதுவாக எல்லாருக்கும் தோன்றியது மலாய்க்காரர் ஒருவர் அதிபராகி நெடுங்காலம் ஆகிவிட்டது. அதனால்தான் இது தலைதூக்கியிருக்கிறது என்று கருதினர். 1970க்குப் பிறகு, அதாவது திரு. யூசோஃப் இஷாக்கிற்குப் பிறகு, மலாய்க்காரர் எவரும் இதுவரை அதிபராகவில்லை. அந்த நிலை மாறவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை எவ்வாறு அரசாங்கம் உறுதிப்படுத்தப்போகிறது என்பதுதான் அனைவரின் மனத்திலும் உதித்த வினா.

மற்றொரு கேள்வியும் எழுந்ததை நிராகரிக்கப்பதற்கில்லை. கடந்த அதிபர் தேர்தலில் வெற்றியை நூலிழையில் நழுவவிட்ட டாக்டர் டான் செங் போக்கைத் தேர்தலில் நிற்கவிடாமல் செய்வதற்காக இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டதா என்பதுதான் அது. அதற்கும் அண்மையில் பதிலளித்தார் சட்ட அமைச்சர் கா. சண்முகம். தனிநபர்கள் சிலரைத் தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதல்ல நோக்கம்; மாறாக நாட்டின் நீண்டகால நலனைக் கருத்தில்கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர அரசாங்கம் முனைகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையில் மாற்றங்கள் என்றவுடன் தகுதி அடிப்படைகள் பற்றிய விவாதமும் அதிபர் ஆலோசகர் மன்றம் குறித்த பேச்சும் விறுவிறுப்பாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். 

பல்வேறு அம்சங்களையும் கவனத்தில்கொண்டே  அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. பிரதமர்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அது, 3 அம்சங்களில் கவனம் செலுத்தியது. 6 மாதத்திற்குப் பிறகு, அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு, அதன் பரிந்துரைகளை முன்வைத்தது.

முதலில் தகுதி அடிப்படைகளைப் பார்ப்போம்.

வேட்பாளர், 100 மில்லியன் வெள்ளி மூலதனத்தைக் கொண்ட நிறுவனத்தை நடத்திய அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிபந்தனை. அதனை உயர்த்த வேண்டும் என்பது அரசமைப்புச் சட்ட ஆணைக்குழுவின் புதிய பரிந்துரை. பங்குதாரர்களின் பங்காக 500 மில்லியன் வெள்ளித் தொகையைக் கொண்ட நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதே அது.  காலத்திற்கேற்ப அவ்வப்போது அதுவும் மாற்றப்பட வேண்டும் என்கிறது குழு. அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டது.

உத்தேச வேட்பாளர்கள், அரசாங்க அல்லது தனியார் துறைகளில் ஆக மூத்த நிர்வாகப் பொறுப்பில் குறைந்தது 6 ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்கிறது குழு. அது தற்போதுள்ள 3 ஆண்டைப் போன்று 2 மடங்கு. அதற்கு அரசாங்கம் இணங்கவில்லை. அவ்வாறு செய்தால், தகுதிபெறும் உத்தேச வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறது அரசாங்கம்.

வேட்பாளரின் அனுபவம் தற்போதைய சூழலுக்குப் பொருந்தக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எனவே அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன் 15 ஆண்டுக்குள் அந்த அனுபவத்தைப் பெற்றவராக அவர் இருக்க வேண்டும் என்றது குழு. அதனைச் சற்றுத் தளர்த்தி அது 20 ஆண்டுக்குள் இருந்தால் போதுமானது என்று சுட்டியது அரசாங்கம்.

அதிபர் தேர்தல் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து இரட்டிப்பாக்கி ஆறாக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் அரசாங்கம் இணங்கியது.

அடுத்து அதிபர் ஆலோசகர் மன்றத்தை வலுப்படுத்துவது.

தற்போது அதில் 6 உறுப்பினர்களும் 2 மாற்று உறுப்பினர்களும் உள்ளனர். ஆலோசகர் மன்றத்தில் மேலும் 2 உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது குழு. அவர்களில் ஒருவரை அதிபரும் மற்றவரைப் பிரதமரும் நியமிப்பார்கள். மற்றொரு பரிந்துரை, உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பானது. தற்போது அது 6 ஆண்டுக்கு நீடிக்கக்கூடியது. மறு-நியமனத்தின்போது மேலும் 4 ஆண்டுக்கு அது செல்லுபடியாகும். அதனையும் 6 ஆண்டுக்கு உயர்த்த வேண்டும் என்றது குழு. அந்தக் கோரிக்கைகளை அங்கீகரித்தது அரசாங்கம்.

நிதி இருப்பு குறித்த அனைத்து விவகாரங்களிலும் பொதுச் சேவைத் துறையின் எல்லா முக்கிய நியமனங்களிலும்  மன்றத்தின் ஆலோசனையை அதிபர் கேட்டறிய வேண்டும் என்றது அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு. அதற்கும் சரி என்றது அரசாங்கம்.

ஆனால் ரத்து அதிகாரம் தொடர்பான பரிந்துரைக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. தற்போதைய முறைப்படி, அதிபர் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனை ஆலோசகர் மன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை எனும் நிலை வருகிறது என்று எண்ணிக்கொள்வோம். அத்தகைய நேரத்தில், நாடாளுமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ரத்து அதிகாரத்தைச் செல்லாததாக்க முடியும். அதனைப் பெரும்பான்மையாக மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது குழுவின் பரிந்துரை.

ஆலோசகர் மன்ற உறுப்பினர்களின் வாக்குகள் சரிசமமாக இருந்து, அதன் தலைவர் தமது வாக்கை அதிபருக்கு ஆதரவாகச் செலுத்தியிருந்தால் மட்டுமே, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எனும் நிபந்தனையைக் கொண்டுவரலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆலோசகர் மன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள், அதிபரின் ரத்து அதிகாரத்தை ஆதரித்தால், நாடாளுமன்றம் அதனை முறியடிப்பதற்குரிய வழிமுறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்போதும் அதே நிலைதான்.

இந்த விவகாரத்தில் குழப்பம் வேண்டாம் என்று அரசாங்கம் கருதுகிறது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எனும் நிலையைத் தொடர விரும்புகிறது அது. 

ரத்து அதிகாரம் என்று வரும்போது மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் என்பதும் குழுவின் வேண்டுகோள். ஆனால் அதிபர் ஆலோசகர் மன்றத்துக்குள் அரசியல் புகுவதைத் தவிர்க்க நினைக்கிறது அரசாங்கம். எனவே தற்போதுள்ள முறையையே பின்பற்ற எண்ணியுள்ளது அது.

இறுதியாக சிறுபான்மையினரும் அவ்வப்போது அதிபராவதை உறுதிசெய்வது.

குறிப்பிட்ட இனத்தினர் 5 தவணைக் காலத்துக்கு அதிபராகவில்லை என்றால், அடுத்த தேர்தலில் அந்த இனத்தைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிடுவதற்கு வகைசெய்ய வேண்டும் என்பது குழுவின் பரிந்துரை. சில நேரங்களில் அந்தக் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த உத்தேச வேட்பாளர்களால் தகுதி அடிப்படைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகலாம். அப்போது தேர்தலில் மற்ற இனத்தவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த தேர்தல் மீண்டும் அந்தக் குறிப்பிட்ட இனத்துக்கு ஒதுக்கப்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டது. இங்கு இனக் குழு என்பது (1) சீனர், (2) மலாய்க்காரர், (3) இந்தியரும் மற்ற சமூகத்தினரும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற சில அம்சங்களையும் குழு பரிந்துரைத்தது. அதிபரை நாடாளுமன்றமே நியமிக்கும் பழைய முறைக்குத் திரும்பலாம் என்ற குழுவின் யோசனையை அரசாங்கம் நிராகரித்தது. அரசாங்கத்துக்கு எதிராக ரத்து ஆணையைப் பயன்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டால், அதற்குரிய அதிகாரத்தைப் பெற்றவராக அதிபர் இருக்கவேண்டும். அதனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருப்பதே சரி என்கிறது அரசாங்கம்.  

பிரசாரத்தின்போது, வேட்பாளர்கள், அதிபரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட அம்சங்களில் வெற்று வாக்குறுதிகளை முன்வைப்பதைக் குற்றமாக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. அது பற்றி ஆராயப்படும் என்று கூறியுள்ளது அரசாங்கம்.

கடந்த மாதம் (அக்டோபர் 2016) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சிங்கப்பூர்க் குடியரசின் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைத் துணைப் பிரதமர் தியோ சீ ஹியென் தாக்கல் செய்தார். இரண்டாம் வாசிப்பு, இம்மாதம் (நவம்பர் 2016) 7ஆம் தேதி. பின்னர் விவாதம். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தால், அவை ஏற்றுக்கொள்ளப்படும். பிறகு புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அது எப்போது என்பதுதான் இப்போதைய கேள்வி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்