பொதுத்தேர்தல் 2020

Images
  • pritam
    (கோப்புப் படம்: Jo Yee Koo)

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் யார் ? அவருக்கு என்னென்ன பொறுப்புகள்?

சிங்கப்பூர் அரசியலில், வரலாறு காணாத மாற்றங்கள் சிலவற்றுக்கு, சென்ற வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தல் வழிவகுத்தது.

முதல் முறையாக 2 குழுத்தொகுதிகள் எதிர்க்கட்சியின் வசம் சென்றன.

பாட்டாளிக் கட்சியின் 10 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிச் செல்வது, இதுவரை சிங்கப்பூர் கண்டிராதது.

அதனால், கட்சியின் தலைமைச் செயலாளரான திரு. பிரித்தம் சிங் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் லீ சியென் லூங் அறிவித்தார்.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, அவருக்குத் தேவையான வளங்களோடு அலுவலர்களும் ஒதுக்கப்படுவர் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்றால் என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி, தேர்தலில் ஆக அதிகமான இடங்களை வென்ற சிறுபான்மைக் கட்சித் தலைவருக்கு வழங்கப்படுவது.

ஆளும் கட்சி பதவி விலகினால், அரசாங்கத்தை வழி நடத்தும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவரையும் அவரின் சிறுபான்மைக் கட்சியையும் சேரும்.

அதனால், எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூடுதல் பொறுப்புகள் உண்டு.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமருக்கு நேர் எதிரில் அமருவது வழக்கம்.

பொறுப்புகள்...

அரசாங்கத்தைக் கண்காணிப்பதையும் தாண்டி, மாறுபட்ட தீர்வுகளையும் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும்.

அதற்கு நிழல் அமைச்சரவை ஒன்றை அமைப்பது வழக்கம்.

இந்த நிழல் அமைச்சரவை அரசாங்கத் திட்டங்களைக் கூர்ந்து கவனித்து, மாற்றுத் திட்டங்களைப் பரிந்துரைக்கும்.

பிற நாடுகளில்...

பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற நடைமுறையைப் பின்பற்றும் பெரும்பாலான நாடுகளில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழக்கமான ஒன்று.

சிங்கப்பூர் நாடாளுமன்றமும் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்தைப் பின்பற்றியே இயங்குகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவருக்கு, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினரைவிடக் கூடுதலான சம்பளம் வழங்கப்படும்.

நிழல் அமைச்சரவை, சிங்கப்பூரில் எவ்வாறு இயங்கப்போகிறது என்பது குறித்த தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்...

இதற்குமுன், சிங்கப்பூரில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இருந்துள்ளனர்.

திரு. சியாம் சீ தோங், 1992ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சித் தலைவராகக் குறிப்பிடப்பட்டார்.

திரு. சியாமை, அப்போதைய நாடாளுமன்ற நாயகரான திரு. வோங் கான் செங் அவ்வாறே அழைத்தார்.

நாடாளுமன்றத்தில் திரு. சியாம், பிரதமருக்கு நேர் எதிரில் அமர்ந்தார்.

திரு. லாவ் தியா கியாங், தமக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, 2011ஆம் ஆண்டில் மறுத்துவிட்டார்...

"ஒன்று அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பதவி இருக்க வேண்டும். இல்லையெனில், அது இல்லை. அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சித் தலைவரைக் கொண்டிருப்பது தேவையில்லாதது"

என்று திரு. லாவ் அப்போது விளக்கமளித்தார். 

Top