பொதுத்தேர்தல் 2020

Images
  • paul
    (படம்: Try Sutrisno Foo)

பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து சுயேச்சை விசாரணை மேற்கொள்ளவேண்டும்:சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து சுயேச்சை விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது.

தேர்தலில்,மாது ஒருவர் வாக்களிக்க முடியாமல் போனதை அடுத்து, கட்சி அவ்வாறு கூறியுள்ளது.

திருவாட்டி லம் எனப்படும் மாது, ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதியின் வாக்காளர்.

36 வயது திருவாட்டி லம் வாக்களிக்கச் சென்றபோது அவர் ஏற்கனவே வாக்களித்துவிட்டதாகத் தேர்தல் அதிகாரி கூறினார்.

இருப்பினும், அதிகாரி தவறுதலாக மின்பதிவுக் கட்டமைப்பின் மற்றொரு பிரிவின் தகவல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அதனையொட்டி நடத்தப்பட்ட விசாரணையில் திருவாட்டி லம் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்தது.

வாக்களிப்பின்போது நேர்ந்த பல்வேறு வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளுக்கான காரணங்களை தேர்தல்துறை விளக்கவேண்டும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா (Paul Tambyah) கூறினார்.

சுயேச்சை விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அதைத் தேர்தலில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல்துறை, பிரதமர் அலுவலகத்திற்குக் கீழ் செயல்படக்கூடாது என்றார் அவர்.

அது சுயேச்சையாகச் செயல்படும் ஓர் அமைப்பிற்குக் கீழ், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் செயல்படவேண்டும் என்று டாக்டர் தம்பையா கூறினார். 

Top