பொதுத்தேர்தல் 2020

Images
  • sengkang (1)
    (படம்: Ngau Kai Yan / TODAY)

செங்காங் ஏன் பாட்டாளிக் கட்சியைத் தேர்ந்தெடுத்தது? - மக்கள் சொல்லும் காரணங்கள்

பொதுத்தேர்தல் 2020இல் பாட்டாளிக் கட்சி செங்காங் குழுத்தொகுதியில் வென்றது.

4 உறுப்பினர்கள் கொண்ட அந்தப் புதிய குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிட்டன.

பாட்டாளிக் கட்சி 52.13 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றது.

மக்கள் செயல் கட்சிக்குத் திரு. இங் சீ மெங் (Ng Chee Meng) தலைமை ஏற்றார்.

அவரது அணியில் டாக்டர் லாம் பின் மின் (Lam Pin Min), திரு. அம்ரின் அமின் (Amrin Amin) என இரண்டு அனுபவசாலிகள் இருந்தனர்.

புதுமுகமாகத் திரு. ரேமண்ட் லாய் (Raymond Lye) களமிறங்கினார்.

ஹி டிங் ரு (He Ting Ru), லூயிஸ் சுவா(Louis Chua), ஜேமஸ் லிம் (Jamus Lim), ரயிசா கான் (Raeesah Khan) ஆகியோர் பாட்டாளிக் கட்சியைப் பிரதிநிதித்து போட்டியிட்டனர்.

நால்வரில் 3 பேர் புதுமுகங்கள். கடந்த பொதுத்தேர்தலில் ஹி டிங் ரு (He Ting Ru) மரீன் பரேட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இரண்டு கட்சிகளும் திறமையான வேட்பாளர்களைக் களமிறக்கிய போதிலும் பாட்டாளிக் கட்சியுடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தததாக வட்டாரவாசிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் வாக்காளர்களின் குரல் ஒலிக்கும் என்று பாட்டாளிக் கட்சி அளித்த வாக்குறுதியும் செங்காங்வாசிகளைக் கவர்ந்தது.

குழுத்தொகுதியில் போதுமான அக்கப்பக்க மளிகைக் கடைகள், உணவங்காடி நிலையங்கள் இல்லாமல் இருப்பதைத் தொகுதிவாசிகள் TODAY-இடம் சுட்டினர்.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளுடன் ஒப்பிடும்போது செங்காங்கில் உணவு விலைகள் அதிகமாக இருப்பதை வட்டாரவாசிகள் குறிப்பிட்டனர்.

கூடுதலான வாடகை அதற்குக் காரணம் என்றனர் அவர்கள்.

பாட்டாளிக் கட்சி அந்தப் பிரச்சினைகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தது.

அதிக அக்கப்பக்கக் கடைகள், காப்பிக் கடைகள் ஆகியவற்றையும் அது பரிந்துரைத்தது.

மக்களின் அக்கறைகளை அது நன்கு பிரதிபலித்ததாகத் தொகுதிவாசிகள் சுட்டினர்.

மக்கள் செயல் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் புதுநகர மன்றம்,கூரை வேயப்பட்ட நடைபாதைகள், விளையாட்டு இடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டது.

செங்காங் குழுத்தொகுதியில் இளையர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மாற்றுக்குரல் ஒலிக்கவேண்டும் என்ற பாட்டாளிக் கட்சியின் கருத்து இளம் வாக்காளர்களிடையே நன்கு எதிரொலித்தது.  

Top