Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ம. செ. க மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது

ஆளும் மக்கள் செயல் கட்சி, பொதுத் தேர்தலில் அமோக வெற்றிகண்டுள்ளது. மொத்தமுள்ள 89 இடங்களில் 83ஐ அது வென்றது. மக்கள் செயல் கட்சி, இம்முறை ஏறக்குறைய 70 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. அது கடந்த தேர்தலைக் காட்டிலும் சுமார் 10 விழுக்காட்டுப் புள்ளி அதிகம். 

வாசிப்புநேரம் -
ம. செ. க மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது

வெற்றி பெற்ற பிரதமர் லீ, தமது ஆதரவாளர்களுடன் கொண்டாடுகிறார். (படம்: Channel NewsAsia)

சிங்கப்பூர்: ஆளும் மக்கள் செயல் கட்சி, பொதுத் தேர்தலில் அமோக வெற்றிகண்டுள்ளது. மொத்தமுள்ள 89 இடங்களில் 83ஐ அது வென்றது. 
மக்கள் செயல் கட்சி, இம்முறை ஏறக்குறைய 70 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. அது கடந்த தேர்தலைக் காட்டிலும் சுமார் 10 விழுக்காட்டுப் புள்ளி அதிகம். 

மக்கள் செயல் கட்சி, பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியைப் பாட்டாளிக் கட்சியிடமிருந்து கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சியின் திரு. சார்ல்ஸ் சோங், சுமார் 52 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று, பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி லீ லி லியனை வெற்றிகண்டார். 

ஆனால் மக்கள் செயல் கட்சி, அல்ஜூனிட் குழுத்தொகுதியையும் ஹோகாங் தனித்தொகுதியையும் கைப்பற்றத் தவறியது. ஹோகாங்கில், அதன் வேட்பாளர் லீ ஹொங் சுவானிற்கு, ஏறக்குறைய 42 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.

அல்ஜூனிட்டில் போட்டி கடுமையாக இருந்தது. முதல்முறை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வித்தியாசம், 2 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இருந்தது. மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு, பாட்டாளிக் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் திரு லீ சியென் லூங், அவரின் அங் மோ கியோ குழுத்தொகுதியில் பெரும் வெற்றி பெற்றார். 6 உறுப்பினர் கொண்ட அந்தத் தொகுதியில், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு. லீயின் குழு, கிட்டத்தட்ட 79 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

தோ பாயோ விளையாட்டரங்கில் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் பேசிய அவர், அங் மோ கியோவை மேலும் ஓர் சிறந்த வசிப்பிடமாகவும் பணியிடமாகவும் வைத்திருக்க வாக்காளர்களுடன் தொடர்ந்து அணுக்கமாய்ப் பணியாற்றப்போவதாகத் தெரிவித்தார்.

ஜூரோங் குழுத் தொகுதியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் தலைமையிலான மக்கள் செயல் கட்சிக் குழு, 80 விழுக்காட்டுச் சற்றுக் குறைவான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. இப்போது, ஜூரோங்கில் மட்டுமல்ல சிங்கப்பூர் முழுதும் ஏராளமான பணி காத்திருப்பதாகத் திரு. தர்மன் கூறினார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் கடும்போட்டி நிலவும் என்று தேர்தலுக்கு முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் முடிவுகள் அவ்வாறு இல்லை. மக்கள் செயல் கட்சி, ஏறக்குறைய 61 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று, பாட்டாளிக் கட்சியை வீழ்த்தியது.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் லாவ் தியா கியாங், தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மக்கள் செயல் கட்சியின் பக்கம் அலை அடித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிவதாக அவர் சொன்னார். அக்கட்சியை திரு. லாவ் பாராட்டினார். மக்கள் செயல் கட்சிக்கு மக்கள் வலுவான அதிகாரத்தைக் கொடுத்திருப்பதால், நான்காம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்க அது வகைசெய்யும் என்றார் அவர்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 2 சுயேச்சை வேட்பாளர்களுமே வைப்புத்தொகையை இழந்தனர். ஒருவர், புக்கிட் பாத்தோ தனித்தொகுதியில் போட்டியிட்ட திரு. சமீர் சலீம். மற்றொருவர், ராடின் மாஸ் தனித்தொகுதியில் போட்டியிட்ட குமாரி ஹான் ஹுய் ஹுய்.

செல்லுபடியான மொத்த வாக்குகளில் 12.5 விழுக்காட்டுக்குக் குறைவாகப் பெறுவோர், வைப்புத்தொகையை இழப்பர். இந்தத் தேர்தலில், அது 14,500 வெள்ளி என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் 2.46 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இறுதியில், 2.3 மில்லியன் பேர் வாக்களித்தனர். அது வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களில் 93.5 விழுக்காடு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்