Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ம.செ.க: "எந்த இடத்திலும் ஒரே விதமாகவே பேசும் இயல்புடையது" - பிரதமர்

எதிர்க்கட்சிகள், இடத்துக்கு ஏற்றவாறு  தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதாக பிரதமர் திரு. Lee Hsien Loong சாடியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

எதிர்க்கட்சிகள், இடத்துக்கு ஏற்றவாறு  தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதாக பிரதமர் திரு. Lee Hsien Loong சாடியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஒரு விதமாகவும்,  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேறு விதமாகவும் அவை நடந்துகொள்வதாக அவர் சொன்னார்.

Jalan Besar குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரசாரக் கூட்டத்தில் திரு. லீ அதனைத் தெரிவித்தார்.

வளர்பிறையைத் தமது பேச்சில் எடுத்துக்காட்டாகச் சுட்டினார் பிரதமர் திரு. லீ. 

முதல் நாள் ஒருவிதமாகவும் 15-ஆவது நாள் வேறுவிதமாகவும் அது காட்சி தரும். 

அதுபோல், பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் திரு. லாவ் தியா கியாங் நாடாளுமன்றத்தில் பேசுவது ஒன்று ; பிரசாரக் கூட்டத்தில் பேசுவது ஒன்று என்றார் திரு. லீ. 

வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டபோது அதன் அணுகுமுறையை வரவேற்பதாகக் கூறியிருந்தார் திரு. லாவ். 

பிரசாரக் கூட்டத்திலோ அரசாங்கத்தின் பொருளியல் கொள்கை மனிதத்தன்மையற்றது என விமர்சிக்கிறார். 

ஆனால், மக்கள் செயல் கட்சி எந்த இடத்திலும் ஒரே விதமாகவே பேசும் இயல்புடையது என்றார் பிரதமர். 

"நான் இங்கு என்ன சொல்கிறேனோ அதைத்தான் நாடாளுமன்றத்திலோ வேறு இடத்திலோ சொல்வேன். அதே வார்த்தை, அதே தகவல்கள், நேர்மையான அதே கருத்தைச் சொல்வேன்." 

"நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி சரியாகச் செயல்படவில்லை" என்று கூறிப் பாட்டாளிக் கட்சி வாக்குக் கேட்கவில்லை என்பதைப் பிரதமர் சுட்டினார். 

மாறாக, மக்கள் செயல் கட்சியை இன்னும் நன்றாகச் செயல்பட வைக்க, தங்கள் உறுப்பினர்கள் அதிகமானோரை மன்றத்துக்கு அனுப்புங்கள் என்றுதான் கேட்கிறது. 

அதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று வினவினார் திரு. லீ. 
மக்களுக்காய்ப் பேசுவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 

மக்கள் செயல் கட்சி, தற்போது மக்களுடன் பேசுகிறது. இடையில் எவரும் தேவையில்லை.

அத்துடன் மக்களோடு பேசி அவர்களைப் புரிந்து கொள்ளாமலா மக்கள் செயல் கட்சி 50 ஆண்டுகள் ஆட்சியிலிருந்திருக்க முடியுமென்று வினவினார் பிரதமர். 

சிங்கப்பூர்க் கலந்துரையாடலில் பல்லாயிரம் பேரிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், மக்கள் செயல் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்