Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உலகக் கிண்ண முதல் சுற்றே அதிரடி?

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றில், அணிகள் எந்தப் பிரிவில் எந்தெந்த அணிகளுடன் மோதும் என்பது முடிவாகிவிட்டது.

வாசிப்புநேரம் -

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றில், அணிகள் எந்தப் பிரிவில் எந்தெந்த அணிகளுடன் மோதும் என்பது முடிவாகிவிட்டது.

8 பிரிவுகள், ஒரு பிரிவில் 4 அணிகள். பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாம் சுற்றுக்குச் செல்லும்.

பல பெரிய அணிகள், அவற்றுக்கும் சவால் தரக்கூடிய அணிகள், எதிர்பாரா வகையில் சிறப்பாக ஆடக்கூடிய அணிகள்... எல்லா பிரிவுகளிலும் நல்ல கலவை இம்முறை.

உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடும் என்று பலர் நம்பும் பெல்ஜியமும், பல உலக ரசிகர்களைக் கொண்டுள்ள இங்கிலாந்தும் G பிரிவில்.

60 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தாலியை உலகக் கிண்ணத்திற்குச் செல்லவிடாமல் செய்த சுவீடனும் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர் அணியுமான ஜெர்மனியும் F பிரிவில்.

பரம வைரிகளான போர்ச்சுகலும் ஸ்பெயினும் பொருதவிருக்கின்றன, B பிரிவில்.

எந்த நேரத்தில் பெரிய அணிகளை வீழ்த்தும் எனக் கணிக்கமுடியாத குரோஷியாவும், உலகக் கிண்ணத்தில் இடம்பெறாமல் இருந்துவிடுமோ எனப் பலர் அஞ்சிய அர்ஜென்டினாவும் D பிரிவில். சென்ற உலகக் கிண்ணத்தில் மிகவும் சுமாராக ஆடியபடியே இறுதியாட்டம் வரை சென்றது அர்ஜென்டினா.

சாதிக்கத் துடிக்கும் டிடியே டேஷோம் நிர்வாகத்தில் இருக்கும் பிரான்ஸ் இடம்பெறும் C பிரிவில் சில நேரங்களில் சவாலாக இருக்கக்கூடிய டென்மார்க் உள்ளது. டென்மார்க்கில் நட்சத்திரம் கிறிஸ்ட்டியன் எரிக்சன் இருக்கிறார்!

போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யாவும் லுயீஸ் சுவாரெஸின் உருகுவேயும் A பிரிவில்.

சென்ற உலகக் கிண்ணத்தில் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பிரேசில், இழந்த நற்பெயரை மீட்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறது. அது இடம்பெறும் E பிரிவில் அதற்குப் போட்டி கொடுக்கக்கூடிய அணி சுவிட்ஸர்லந்து.

சென்ற உலகக் கிண்ணத்தில் பலரைக் கவர்ந்த கொலம்பியா H பிரிவில். அதே பிரிவில் 1974, 82 போட்டிகளில் மூன்றாவதாக முடித்த போலந்து.

குறிப்பிடாத இதர அணிகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

இத்தாலியே இடம்பெறமுடியாத உலகக் கிண்ணம் இது. குறிப்பிடாத அணிகள் சிறந்த அணிகளைக் கவிழ்த்துப் போட்டியை ஒரு கை பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னவேண்டுமானாலும் நடக்கலாம். இது உலகக் கிண்ணம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்