Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

என்னால் முடியும்! - உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அகதிகளுக்கான குழுவைச் சேர்ந்த முதல் பெண்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளன. 

வாசிப்புநேரம் -
என்னால் முடியும்! - உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அகதிகளுக்கான குழுவைச் சேர்ந்த முதல் பெண்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: olympics.com

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளன.

குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல், 'என்னால் முடியும்' என்று சாதித்துக் காட்டிய, சாதிக்கத் துடிக்கும் சில விளையாட்டர்களின் கதைகள், 'செய்தி' நேயர்களுக்காக!

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அகதிகளுக்கென்றே சிறப்புக் குழு ஒன்று உள்ளது. பொதுவாக, போட்டியாளர்கள் தங்கள் நாடுகளின் சார்பில் போட்டிகளில் கலந்துகொள்வர். ஆனால், உலகில் உள்ள அகதிகள் மில்லியன் கணக்கானோரின் சார்பாக, அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் முதன்முறையாகப் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.

அவர் பெயர் அலியா இசா (Alia Issa).

சிரியா அகதிகளான அவரது பெற்றோர் அவரை கிரீசில் பெற்று வளர்த்தனர்.

அவருக்கு 4 வயதிருக்கும் போது பெரியம்மை நோய்த்தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது பேச்சு, அசைவு ஆகியவை பாதிப்படைந்தன.

அவர் 16 வயதாக இருந்தபோது, அவரது தந்தை கடுமையான புற்றுநோயால் மாண்டார்.

அவருக்குத் தற்போது 20 வயது ஆகிறது. சென்ற ஆண்டு கிரேக்க தேசியப் போட்டிகளில், கட்டை எறிதல் போட்டியில் பங்கெடுத்த அவர், 14.40 மீட்டர் தூரத்துக்குக் கட்டையை வீசியிருந்தார்.

அவர் இவ்வாண்டு தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற முற்படுகிறார்.

சிறுவயதில் பலரும் அவரது உடற்குறையைக் காரணம் காட்டி அவரைக் கேலி செய்தனர். இறந்துபோன அவரது தந்தை அவ்வாறு செய்வோரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என அவருக்கு முன்பு கற்றுக்கொடுத்ததை அவர் பகிர்ந்துகொண்டார்.

அவரைப் போல் உள்ள மற்ற உடற்குறையுள்ள, அகதிகளான நிலையில் இருக்கும் இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க அலியா விரும்புகிறார்.

ஊனம் என்பது மனத்தளவில் இருக்கக்கூடிய ஒன்று. ஒருவர் உடற்குறைகளை ஊனமாக எடுத்துக்கொள்ளாமல், வெளியே சென்று சாதிக்க முயலவேண்டும் என ஆணித்தரமாகக் கருதுகிறார், அலியா.

ஆதாரம்: Olympics.com 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்