Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின - meWATCH உள்பட மீடியாகார்ப் கட்டமைப்புகளில் போட்டியைக் காணலாம்

தோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள், ஓராண்டுத் தாமதத்துக்குப் பிறகு, சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. 

வாசிப்புநேரம் -
தோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின - meWATCH உள்பட மீடியாகார்ப் கட்டமைப்புகளில் போட்டியைக் காணலாம்

படம்: AFP

தோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள், ஓராண்டுத் தாமதத்துக்குப் பிறகு, சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.

207 நாடுகளைச் சேர்ந்த 11,300-க்கும் அதிகமான போட்டியாளர்கள், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

339-வகையான போட்டிகளில், பதக்கங்களை வெற்றிகொள்ளக் கடுமையான பயிற்சிக்குப்பின் அவர்கள் களம்காணக் காத்திருக்கின்றனர்.

தோக்கியோ ஒலிம்பிக்கில், முதன்முறையாக 5 புதுவகையான விளையாட்டுப் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை இல்லாத வகையில், சுமார் 49 விழுக்காட்டுப் பெண் போட்டியாளர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

கிருமித்தொற்றுச் சூழலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்த ஜப்பான் மீது, பரவலாகக் குறைகூறப்பட்டு வருகிறது.

இருப்பினும், கிருமித்தொற்றால் சோர்வடைந்துள்ள உலகிற்கு, இந்தப் போட்டிகள் புது நம்பிக்கையை அளிக்கும் என்பதால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதாக, ஜப்பான் கூறுகிறது.

ஜப்பானிய மக்களில் கணிசமானவர்கள், போட்டியை ஆதரிக்கவில்லை என்றபோதும், அதிகாரபூர்வமாகப் போட்டி தொடங்கியதும் அவர்கள் மனம் மாறிப் போட்டிகளை ஆதரிப்பர் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

முகக்கவசம், உமிழ்நீர்ப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல்-என இதுவரை இல்லாத புதுப்புதுக் கட்டுப்பாடுகளோடு தோக்கியோ ஒலிம்பிக் அரங்கேறுகிறது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், போட்டியைப் பாதுகாப்பாக நடத்திமுடிக்க ஜப்பானிய அதிகாரிகள் உறுதிபூண்டுள்ளனர்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். 

meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்