Images
  • indiarace
    படம்: REUTERS

ஆஸ்திரேலியா: விளையாட்டரங்கில் இந்திய வீரர்களுக்குத் தொந்தரவு - காவல்துறையால் சில ரசிகர்கள் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய வீரர்களுக்கு, சில ரசிகர்கள் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது சிட்னியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகின்றன.

ஆட்டத்தின் நான்காவது நாளான இன்று, எல்லைக் கோட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த முகமது சிராஜ் என்னும் போட்டியாளர், இனரீதியான வசவுச் சொற்களால் சில ரசிகர்கள் தம்மைத் தொந்தரவு செய்ததாகப் புகார் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, ஆட்டம் சிறிது நேரத்துக்கு நிறுத்தப்பட்டது.

இந்திய அணியினரின் புகாரை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அதன் பிறகு, அந்தப்பகுதியில் இருந்த குறைந்தது 6 ரசிகர்கள் விளையாட்டு அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

போட்டியின் மூன்றாவது நாளான நேற்றும் இந்திய அணி வீரர்கள், இனரீதியாகத் தாங்கள் விமர்சிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவிடம் புகார் கொடுத்திருந்தனர்.

தற்போது அது குறித்தும், விசாரணை நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்று குறிப்பிட்ட அந்நாட்டுக் கிரிக்கெட் பாதுகாப்புக் குழுத் தலைவர், அதைக் கடுமையாய்க் கண்டிப்பதாகக் கூறினார்.   

Top