Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம் 2018: கவனிக்கப்படவேண்டிய அணிகள் - பாகம் 2

இன்று நாம் பார்க்கவிருப்பவை ஏற்கனவே உலகக் கிண்ணத்தைத் தொட்டுப் பார்த்திருக்கும் அர்ஜென்ட்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகளை.

வாசிப்புநேரம் -

இன்று நாம் பார்க்கவிருப்பவை ஏற்கனவே உலகக் கிண்ணத்தைத் தொட்டுப் பார்த்திருக்கும் அர்ஜென்ட்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகளை.

அர்ஜென்ட்டினா: இம்முறை மெஸ்ஸி எப்படி...

படம்: AFP

அர்ஜென்ட்டினா என்று சொன்னாலே பலருக்கு நினைவுக்கு வருவது லயனல் மெஸ்ஸிதான். ஒரு காலத்தில் டியேகோ மரடோனோ நினைவுக்கு வருவார், இன்றும் பலரால் மரடோனாவை விட்டுக்கொடுக்கமுடியாது.

மரடோனாவின் நிலையை அடைய மெஸ்ஸி அபாரமாக ஆடி உலகக் கிண்ணத்தை வெல்வதில் அர்ஜென்ட்டினாவுக்கு உதவ வேண்டும். இதுதான் உண்மை!

அணியில் இதர விளையாட்டாளர்களும் இருக்கின்றனர். காற்பந்து என்பது குழு விளையாட்டு. அர்ஜென்ட்டினா, பிரேசில் போன்ற நாடுகளில் திறமைக்குப் பஞ்சமில்லை. எத்தகைய விளையாட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது பயிற்றுவிப்பாளர்களின் திறமையையும் பொறுத்திருக்கிறது. இதற்கு மேல் internal politics, அதாவது புகழுக்கான போராட்டம், அரசியல்! இந்தப் பிரச்சினை எவ்வளவு தூரம் அணியில் உள்ளது என்பது தெரியவில்லை.

அணியின் பெரும்பாலான விளையாட்டாளர்களுக்குக் குறைந்தது 30 வயது. முன்னிலை ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் குறைந்தது சுமார் 30 வயது, பாவ்லோ டைபாலாவைத் தவிர. இத்தாலிய சரீ-A-வில் ஆக அதிக கோல்களை அடித்த மாவ்ரோ இக்கார்டி, அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அர்ஜென்ட்டினா, புத்துயிர் தேவைப்படும் அணிபோலத் தெரிகிறது.

அர்ஜென்ட்டினாவின் மொத்த நம்பிக்கையும் இப்போது லயனல் மெஸ்ஸி மீது. அவர் அதைக் காப்பாற்றுவாரா?

இங்கிலாந்து: 52-ஆண்டு வறட்சி

படம்: AFP

காற்பந்தில் அர்ஜென்ட்டினாவுக்கு 2 பரம வைரிகள். ஒன்று பிரேசில், மற்றொன்று இங்கிலாந்து.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும், ஆனால் எவ்வளவு திறமையான விளையாட்டாளர்கள் இருந்தபோதும் போட்டியில் இங்கிலாந்து நீண்டகாலமாகச் சோபிக்கவில்லை.

இம்முறை ஒரு சிறு வேறுபாடு. பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் எதிர்பார்ப்புகளைக் குறைப்பதில் அக்கறை காட்டிவருகிறார். அது நல்லதாக இருக்கலாம்.

டெலி அலி, ஹேரி கேன், மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், எரிக் டையர், ஜேமி வார்டி, ஜெஸ்ஸி லின்கார்ட், டிரென்டெ அலெக்ஸாண்டர் அர்னால்ட் உள்ளிட்டோர் இங்கிலாந்தில். இளம், துடிப்பான விளையாட்டாளர்கள், கம்பீரமான வீரர்கள், அணியை வழிநடத்தக்கூடிய வயதான விளையாட்டாளர்கள் என எல்லா வகையினரும் உள்ளனர்.

கேரத் சவுத்கேட் தேர்ந்தெடுக்கவிருக்கும் விளையாட்டாளர்கள், விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் முறை, பயன்படுத்தும் உத்திகள் ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது இங்கிலாந்து நன்றாக ஆடுவது. அரையிறுதிக்குச் சென்றால்கூட அது வெற்றிதான். 

ஹேரி கேன் அணித்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது சரியான முடிவா என்பது இனிதான் தெரியவரும்.

ஜெர்மனி: தொடருமா வெற்றி?

படம்: AFP 

நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி என்றுமே இதர அணிகளுக்கு மிரட்டல்தான். சென்ற போட்டியின் அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தி இறுதிச் சுற்றில் அர்ஜென்ட்டினாவை வென்றது ஜெர்மனி.

ஈராண்டுக்கு முன்பு யூரோ 2016இல் ஜெர்மனி எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவில்லை.

எனினும் திறமையான அணிதான். ஆனால் அது மீண்டும் கிண்ணத்தைக் கைப்பற்றும் அளவிற்கு உள்ளதா என்பது தெரியவில்லை. காரணம், இம்முறை கூடுதல் போட்டி இருக்கும் என்பது என் கணிப்பு.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்