Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம் – மின்னும் நினைவுகள் 2

உலகக் கிண்ண வரலாற்றில் இடம்பிடித்த சில வீரர்களைப் பார்த்துவருகிறோம். நேற்று ஐவர் இடம்பெற்றனர். இன்று மேலும் சிலர்.

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ண வரலாற்றில் இடம்பிடித்த சில வீரர்களைப் பார்த்துவருகிறோம். நேற்று ஐவர் இடம்பெற்றனர். இன்று மேலும் சிலர்.

1. ஸினெடீன் ஸிடான்

படம்: AFP

பிரான்ஸ் ஓர் உலகப் பிரபல அணியாக உருவெடுத்தது 1998இல். அந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை முதன்முறையாக வென்றது அது. இறுதியாட்டத்தில் பிரேசிலுக்கு எதிராக 2 கோல்களை அடித்தார் ஸினெடீன் ஸிடான்.

அன்றிலிருந்தே அவர் உலகின் தலைசிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டார். அவரின் அற்புதமான விளையாட்டும் திடலின் எந்தப் பகுதியிலும் நின்றபடியே கோல்களை உருவாக்கக்கூடிய ஆற்றலும்... ப்பா!

பிரான்ஸ் அணியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் ஸினெடீன் ஸிடான்!

2. லெவ் யாஷின்

படம்: AFP

சோவியட் யூனியனுக்கு 4 உலகக் கிண்ணங்களில் ஆடியவர் தலைசிறந்த கோல்காவலர்களில் ஒருவரான லெவ் யாஷின்.

1958இலிருந்து 1970க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற அனைத்து உலகக் கிண்ணங்களிலும் ஆடினார் யாஷின். 1958 போட்டியில் இவரது விளையாட்டையும் எதிரணியினரை எளிதில் கோலடிக்க விடாமல் தடுத்த்தையும் இன்றும் சிலர் மறக்காமல் நினைவுகூர்கின்றனர்.

3. பால் கேஸ்கோயின்

படம்: Reuters 

முழு ஆற்றலையும் வெளிப்படுத்தாமலேயே போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் இங்கிலாந்தின் பால் கேஸ்கோயின். இருந்தாலும் 1990 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக ஆடினார்.

1966ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து 1990இல்தான் அரையிறுதிச் சுற்றுக்குச் சென்றது. அந்த அணியில் பலரை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியவர் கேஸ்கோயின். காரணம், இங்கிலாந்தில் பொதுவாக அத்தகைய நளினமான நடுநிலை விளையாட்டாளர்கள் அதுவரை இருந்ததில்லை.

4. ரோஜர் மிலா

படம்: AFP

1990இல் கெமரூன் காலிறுதி வரை சென்றது. உலகக் கிண்ணப் போட்டியில் அவ்வளவு தூரம் சென்ற முதல் ஆப்பிரிக்க அணி கெமரூன். அதன் நட்சத்திர விளையாட்டாளர், 38-வயது ரோஜர் மிலா.

பொதுவாக விளையாட்டாளர்கள் ஓய்வுபெறும் வயதில், நாட்டிற்காக அபாரமாக ஆடி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மிலா.

1994 போட்டியில் 42ஆவது வயதிலும் ஒரு கோலை அடித்தார். உலகக் கிண்ண வரலாற்றில் ஆக அதிக வயதில் கோலடித்த பெருமையைப் பெற்றவர் மிலா!

5. இயுசேபியோ

படம்: AFP

போர்ச்சுகல் என்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது புதுமொழி. போர்ச்சுகல் என்றால் இயுசேபியோ என்பது பழமொழி, பொன்மொழி!

1966இல் அவ்வளவு பிரபலமாக இல்லாதபோதே அரையிறுதி வரை சென்றது போர்ச்சுகல். காலிறுதியில் அது வடகொரியாவைச் சந்தித்தது.

3-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது வடகொரியா. பின்னர் 5 கோல்களை அடித்து அனைவரையும் திக்குமுக்காடச் செய்து ஆட்டத்தை வென்றது போர்ச்சுகல். 5 கோல்களில் 4ஐ அடித்தவர் இயுசேபியோ.

போர்ச்சுகலின் பென்ஃபிக்கா அணிக்கு ஆடிப் பிரபலமாகத் திகழ்ந்தார் இயுசேபியோ.

6. ஜியூஸ் ஃபொன்ட்டேன்

படம்: AFP

1958 உலகக் கிண்ணத்தில் பிரான்ஸுக்கு ஆறே ஆட்டங்களில் 13 கோல்களை அடித்தார் ஜியூஸ் ஃபொன்ட்டேன். ஒரே உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆக அதிக கோல்களை அடித்த பெருமை அவரையே சேரும்.

சாதனை, இன்று வரை முறியடிக்கப்படவில்லை! மேலும் சில உலகக் கிண்ண ஜாம்பவான்களை நாளை பார்ப்போம்.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்