Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம் - மின்னும் நினைவுகள் - பாகம் 1

உலகக் கிண்ணக் காற்பந்து தொடங்க இன்னும் ஒருசில வாரங்களே உள்ளன. 4 ஆண்டு காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கலாம்.

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்து தொடங்க இன்னும் ஒருசில வாரங்களே உள்ளன. 4 ஆண்டு காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கலாம்.

அதற்கு முன்னர் உலகக் கிண்ணம் குறித்த சில சுவைத் தகவல்களை வரும் வாரங்களில் பார்க்கவிருக்கிறோம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சலா, லயனல் மெஸ்ஸி, ஏன்டுவான் கிறீஸ்மன், டெலி அலி, கேப்ரியல் ஹெசூஸ் போன்ற பல நட்சத்திர விளையாட்டாளர்கள்... உலக அரங்கில் முத்திரை பதிக்கவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். இவர்கள் அரங்குகளை அதிரவைப்பதைக் காண ஆவலாய் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதுவரை நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரபலமாக விளங்கிய வீரர்களில் சிலரை நினைவுகூர்வோம்.

1. டியேகொ மரடோனா

படம்: AFP

டியேகொ மரடோனாவைப் பற்றிய பேச்சு இல்லாத உலகக் கிண்ணமா என்று கேட்கும் அளவிற்கு உள்ளது இவரின் சாதனைகள். 1986இல் மரடோனா இல்லாதிருந்தால் அர்ஜென்ட்டினா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்குமா என்பது சந்தேகமே.

கிண்ணத்தைத் தமது நாட்டிற்குப் பெற்றுத்தரவேண்டும் என்ற வீம்புடன் ஆடினார். இரண்டாம் சுற்றில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 2 கோல்களையும் மறக்கமுடியுமா?

முதல் கோலைக் கையால் அடித்தார். அதை நடுவர் கவனிக்கவில்லை, பின்னர் மரடோனாவே ஒப்புக்கொண்டார், பலரின் கண்டனத்திற்கு ஆளானார்.

ஆனால் அதை மறக்கச் செய்தது இரண்டாவது கோல்... காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த கோல் என்றுகூட பலர் சொல்வதுண்டு. பந்தை வைத்துக்கொண்டு இங்கிலாந்தின் 7 விளையாட்டாளர்களைத் தாண்டிச் சென்று கோலடித்தார் மரடோனா. உலகின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பினார்!

ஆனால் பின்னர் பல சர்ச்சைகளுக்கு ஆளானவர் மரடோனா. இருந்தாலும் உலகின் ஆகச் சிறந்த விளையாட்டாளர் எனப் பலரும் மரடோனாவைக் கருதுகின்றனர்.

2. பெலே

படம்: AFP

உலகின் ஆகச் சிறந்த விளையாட்டார் மரடோனா இல்லை, பெலேதான் என்ற விவாதம் என்றுமே உண்டு. பெலே சளைத்தவர் இல்லைதான்.

1958இலிருந்து 1970 வரை 4 உலகக் கிண்ணங்களில் பிரேசிலுக்காக ஆடினார் பெலே. அவற்றில் 3 உலகக் கிண்ணங்களை பிரேசில் வென்றது.

1970இல் பிரேசில் பிரமாதமாக ஆடியது. இன்றும் பிரேசிலைக் காற்பந்துக்கு முன்னோடியாகப் பார்ப்பதற்கு அந்த உலகக் கிண்ணத்தில் அணி ஆடிய மாயாஜால ஆட்டமே. அந்த அணியின் ஆக முக்கிய வீரர், பெலே!

3. கெர்ட் முல்லர்

படம்: AFP

இந்தக் காலத்தில் அவ்வளவாகப் பேசப்படாத பல வீரர்களில் ஒருவர் கெர்ட் முல்லர். உலகக் கிண்ணம் இன்று இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு அச்சாணியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

1974இல் உலகக் கிண்ணத்தை வென்றது மேற்கு ஜெர்மனி. சிறந்த அணிகளையும் திக்குமுக்காடச் செய்த நெதர்லந்தை இறுதியாட்டத்தில் வென்றது அது. அந்த ஆட்டத்தில் ஜெர்மனியின் அபாரமான இரண்டாம் கோலை அடித்தவர் முல்லர்.

காற்பந்து வரலாற்றில் மிகச் சிறந்த முன்னிலை விளையாட்டாளர்களில் ஒருவர் கெர்ட் முல்லர்.

4. யேஹான் கிரைஃப்

படம்: AFP

1974 உலகக் கிண்ணத்தை மேற்கு ஜெர்மனி வென்றிருந்தாலும் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தது நெதர்லந்துதான். அதன் புதுவிதமான விளையாட்டும் எந்த அணியையும் உதறித் தள்ளக்கூடிய ஆற்றலும் தனி ரகம்!

அந்த அணியைக் கம்பீரமாக வழிநடத்தியவர் யோஹான் கிரைஃப்! சிறந்த விளையாட்டாளர் மட்டுமல்ல, ஓர் ஆட்டத்தை நன்கு ஆராய்ந்து எவ்வாறு அணுகவேண்டும் என்பதை நன்கறிந்து செயல்படக்கூடிய திறனைக் கொண்டவர் அவர்!

இனி கிரைஃபைப் போன்ற ஒரு வீரர் நெதர்லந்துக்குக் கிடைப்பாரா என்பது சந்தேகமே!

5. ஜியோஃப் ஹர்ஸ்ட்

படம்: AFP

1966இல் இங்கிலாந்து அதன் ஒரே உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. போட்டியின் இறுதியாட்டத்தில் அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என வென்றது. அதில் 3 கோல்களை அடித்தார் ஹர்ஸ்ட்.

இன்று வரை உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் 3 கோல்களை அடித்த ஒரே வீரர் ஜியோஃப் ஹர்ஸ்ட்!

இவர்கள் ஐவரோடு முடியவில்லை. மேலும் சிலரை நாளை பார்ப்போம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்