Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம் 2018: கவனிக்கவேண்டிய அணிகள் - பாகம் 3

இதுவரை பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்ட்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகளைக் கண்ணோட்டமிட்டோம். இறுதியாக பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல்...

வாசிப்புநேரம் -

இதுவரை பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்ட்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகளைக் கண்ணோட்டமிட்டோம். இறுதியாக பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல்...

பெல்ஜியம்: ஆற்றல் வெளிப்படுமா?

படம்: AFP

உலக அரங்கில் அமைதியாக வளர்ச்சிகண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதற்குப் போட்டி கொடுக்கக்கூடிய அளவிற்கு உயர்ந்துள்ளது பெல்ஜியம். ஒரு காலத்தில் அவ்வளவாகப் பேசப்படாத பெல்ஜியத்தின் வளர்ச்சி அமோகம்!

எனினும் கடந்த யூரோ 2016, சென்ற உலகக் கிண்ணம் இரண்டிலும் அணி ஏமாற்றத்தைத் தந்தது.

ஆனால் இப்போது வேறு பயிற்றுவிப்பாளர். பெல்ஜியத்தைச் சிறப்பாக ஆடவைக்கும் பெரிய பொறுப்பு உள்ளது தற்போதைய பயிற்றுவிப்பாளர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸுக்கு. இங்கிலீஷ் பிரிமியர் லீகில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டாலும் மார்ட்டினெஸ், விகன் அணிக்கு FA கிண்ணத்தை வென்றுதந்ததை மறந்துவிடமுடியாது. லீக் அணியை நிர்வாகம் செய்வது வேறு, தேசிய அணி என்பது வேறு.

கெவின் டிபுரோய்ன, ரொமெலு லுக்காக்கு, ஈடன் ஹஸார்ட், வின்சென்ட் கொம்பனி போன்றோரைக் கொண்ட அணி பெல்ஜியம். இந்தப் போட்டியைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அணி அவ்வளவுதான்!

ஸ்பெயின்: முடியுமா மீண்டும் வெல்ல?

படம்: AFP

10 ஆண்டுக்கு முன்பு வரை ஸ்பெயினும் இங்கிலாந்தைப் போன்ற அணிதான். எதிர்பார்ப்புகள் இருக்கும், ஆனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் கோட்டைவிட்டுவிடும்.

பின்னர் 2008, 2012 யூரோ கிண்ணங்களை வென்றது, 2010 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அணியின் போக்கு மாறியது.

2012க்குப் பிறகு மீண்டும் சுமாராகத் தென்படுகிறது ஸ்பெயின். செர்ஜியோ ராமொஸ், ஜெரார்ட் பிக்கே, டாவிட் சில்வா, ஆன்டிரஸ் இனியெஸ்ட்டா, செர்ஜியோ புஷ்கெட்ஸ் போன்ற வயதான விளையாட்டாளர்களை அணி இன்னமும் ஓரளவுக்கு நம்பியிருக்கிறது. அர்ஜென்ட்டினாவைப் போல் ஸ்பெயினுக்கும் புத்துயிர் தேவை.

கோல்காவலர் டாவிட் டகெயா தற்போது உலகின் ஆகச் சிறந்த கோல்காவலர். அது மட்டும் போதுமா?

போர்ச்சுகல்: யூரோ நடப்பு வெற்றியாளர்கள்...

படம்: AFP

யூரோ 2016 தொடங்குவதற்கு முன் போர்ச்சுகலை யாரும் பெரிதாக எண்ணவில்லை. அதை வென்ற பிறகு பெரிதாக எண்ணாமல் இருக்க முடியவில்லை.

33 வயதில் ரொனால்டோ அதே துடிப்புடன் ஆடிவருகிறார். அவரைத் தவிர அணியில் நட்சத்திரங்கள் என்று சொல்லும்படி யாரும் இல்லை.

இருந்தாலும் பயிற்றுவிப்பாளர் ஃபர்னான்டோ சந்தோஸ் சரியான விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுத்து தக்க நேரத்தில் ஆட்டங்களை வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

போர்ச்சுகலிடம் விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கமுடியாது. ஆனால் கச்சிதமாக ஆடி அணி அரையிறுதி வரையாவது சென்றால் ஆச்சரியம் இல்லை.

8 அணிகளை மட்டும்தான் பார்தோம். இது உலகக் கிண்ணம். எதிர்பார்ப்புகளை முறியடிக்கப் பல அணிகள் காத்துக்கொண்டிருக்கும். பெரு, போலந்து, டென்மார்க், ஜப்பான், தென்கொரியா, சுவீடன், கொலம்பியா போன்றவை எந்நேரமும் பெரிய அணிகளை வென்று போட்டியைத் தலைகீழாகத் திருப்பக்கூடியவை.

சென்ற போட்டியில் கொஸ்ட்டா ரிக்கா காலிறுதிச் சுற்று வரை சென்றது, எப்போதும் நினைவில் இருக்கும்!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்