Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஒற்றர் மீதான நச்சு ரசாயனத் தாக்குதலுக்குப் பின்னணியில் ரஷ்யா இருக்க அதிக வாய்ப்பு: தெரேசா மே

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய ஒற்றர், அவரது மகள் இருவர் மீதும் நடத்தப்பட்ட நச்சு ரசாயனத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய ஒற்றர், அவரது மகள் இருவர் மீதும் நடத்தப்பட்ட நச்சு ரசாயனத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார். அது பொறுப்பற்ற வெறுக்கத்தக்க செயல் என்று அவர் வருணித்தார். சென்ற வாரம் செலிஸ்பரி வட்டாரத்தில், அந்தத் தாக்குதல் நடந்தது.

நொவிச்சொக் எனப்படும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் நச்சு ரசாயனம் அவர்கள்மீது பயன்படுத்தப்பட்டதாகத் திருமதி மே, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரஷ்யா அதன் ராணுவப் பயன்பாட்டுக்காக அந்த ரசாயனத்தை உருவாக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ரஷ்யா இதற்கு முன்னர் அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்ட படுகொலைகளில் அதனைப் பயன்படுத்தியதை திருமதி மே சுட்டினார்.
பிரதமர் மேயின் குற்றச்சாட்டை மாஸ்கோ உடனடியாக மறுத்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா ஸக்ஹாரொவா, பிரிட்டன் பிரதமரின் அறிக்கை சினமூட்டுவதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பிரச்சாரம் என்று குறிப்பிட்டார்.
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன், அந்த விவகாரம் குறித்து நேரில் சந்தித்துப் பேச, ரஷ்யத் தூதருக்கு அழைப்பு விடுத்திருப்பதாகப் பிரதமர் மே கூறினார்.
நொவிச்சொக் நச்சு ரசாயனத் திட்டம் குறித்த முழு, வெளிப்படையான அறிக்கையை, அனைத்துலக ரசாயன-ஆயுதக் கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்குமாறு ரஷ்யத் தூதர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
முன்னாள் ஒற்றர் செர்கி ஸ்க்ரிபால் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவுக்கு நேரடித் தொடர்பு இருக்கிறதா அல்லது ரஷ்ய அரசாங்கம் அந்த நச்சு ரசாயனம் மீதான கட்டுப்பாட்டை இழந்ததால் வேறு யாரேனும் அதைப் பயன்படுத்தினரா என்று விளக்கமளிக்குமாறு ரஷ்யத் தூதரிடம் கேட்டிருப்பதாகத் திருமதி மே குறிப்பிட்டார்.
ரஷ்ய அரசாங்கம் இன்றைக்குள் முறையான பதில் அளிக்காவிட்டால், சட்டவிரோதமான முறையில் பிரிட்டனுக்கு எதிராக ரஷ்யா அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக எடுத்துக்கொள்ளப்படும் என்றார் அவர்.
ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும், பிரிட்டனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்