Images
  • pregnant
    (படம்:Pixabay)

புதுடில்லியில் 8 மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் மாண்ட கர்ப்பிணி

புதுடில்லியில், பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்மணிக்குப் பிரசவம் பார்க்க 8 மருத்துவமனைகள் மறுத்ததால், தாயும் சேயும் மாண்டனர்.

15 மணி நேரமாக, ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கியும் அவற்றில் ஒன்றுகூட தமது மனைவிக்குப் பிரசவம் பார்க்க முன்வரவில்லை என அவரது கணவர் பிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இடமில்லை என்று கூறி மருத்துவமனைகள் அந்த 30 வயது கர்ப்பிணியைத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

சில மருத்துவமனைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு தங்கள் மருத்துவமனையில் இல்லை எனக் கூறிக் கைவிரித்துவிட்டன.

அவருக்கு COVID-19 நோய் இருக்கலாம் என்ற அச்சத்தில், மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

The New York Times செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதால், நோயாளிகள் மாண்டுபோகும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

கிருமிப் பரவலைச் சமாளிக்கப் போதுமான வசதிகள் இல்லாததால், பெரும்பாலான மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றன.

மருத்துவமனை நிர்வாகமும் பணியாளர்களும் கவனக்குறைவாய் நடந்துகொண்டதாக, அரசாங்கம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கோவிட்-19 நோய் தவிர, வழக்கமான அவசர சிகிச்சைக்கு வரும் எவரையும் மருத்துவமனைகள் புறக்கணிக்கக் கூடாது என, இந்திய அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

ஆனால், கொரோனா கிருமி தொற்றிய நோயாளிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளை மூடவேண்டுமென்றும் அரசாங்கம் வற்புறுத்துவதை சுகாதாரத் துறை நிபுணர்கள் சுட்டினர்.

தவறான அந்தக் கொள்கை காரணமாகவே, லாப நோக்கில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் எந்தவொரு புதிய நோயாளியையும் சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்வதில்லை என்று அவர்கள் கூறினர்.  

Top