Images
  • alaska (1)
    (படம்: AFP PHOTO / ALASKA STATE TROOPERS)

அமெரிக்கா: கடும் பனியில் சிக்கிக்கொண்ட அலாஸ்கா ஆடவர் 3 வாரம் கழித்துப் பாதுகாப்பாக மீட்பு

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தவர் 30 வயது டைசன் ஸ்டீல் (Tyson Steele).

சென்ற செப்டம்பர் மாதத்திலிருந்து, சுசிட்னா (Susitna) பள்ளத்தாக்கில் இருந்த சிறிய குடிலில் வசித்து வந்தார்.

வியட்நாமியப் போரில் பங்கெடுத்த முன்னாள் ராணுவ வீரரிடமிருந்து வாங்கப்பட்ட அந்தக் குடில் மரப்பலகைகள், தார்ப்பாய் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட ஒன்று.

சென்ற மாத நடுப்பகுதியில் ஓர் இரவில் குடில் தீப்பற்றிக்கொண்டது.

ஸ்டீலின் பிரியத்துக்குரிய நாய் அதில் மாண்டது. அவரது மற்ற உடைமைகளும் தீக்கிரையாயின.

அவரால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

படர்ந்திருந்த பனியில் உதவி கோரி "SOS" எனச் செதுக்கிவிட்டு, பனிக்குகை போன்ற அமைப்பினுள் தங்கிக்கொண்டார்.

தீக்கு எஞ்சிய சில உணவுக் குப்பிகள் பசித் தீயிலிருந்து தப்ப ஓரளவு கைகொடுத்தன.

சில வாரங்களாக அவரிடமிருந்து தகவல் இல்லாததால் பதறிய ஸ்டீலின் பெற்றோர் அதிகாரிகளை நாடினர்.

மாநில மீட்புப் பிரிவினர் அவரைக் கண்டுபிடித்து மீட்டனர்.

3 வாரங்களாக, உறைய வைக்கும் குளிர், முறையான உணவுக்கும் வழியில்லை; இருப்பினும் ஸ்டீலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

Top