Images
  • Mike pom ph
    ( படம்: AFP )

அமெரிக்கா-சீனா: உயர்நிலைப் பாதுகாப்புப் பேச்சு மீண்டும் தொடக்கம்

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் அரசதந்திர ரீதியிலான உயர்நிலைப் பாதுகாப்புப் பேச்சுகள் இன்று மீண்டும் தொடங்கவிருக்கின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ, தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்தீஸ் இருவரும், சீன உயர் அதிகாரி யாங் ஜியாசி , சீனத் தற்காப்பு அமைச்சர் வே ஃபேங்கி ஆகியோரை வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுவர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த அந்தக் கலந்துரையாடல், ரஷ்ய ஆயுதங்களை வாங்கியதற்காகச் சீனா மீது அமெரிக்கா அபராதம் விதித்ததையடுத்துத் தள்ளிப்போடப்பட்டது.

இன்றைய சந்திப்பு, இருதரப்பு உறவுகள் சீரடைந்து வருவதைக் காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

வர்த்தகப் பதற்றம், தென் சீனக் கடலிலும், தைவான்-நீரிணையிலும் இராணுவ ஆதிக்க நடவடிக்கைகள் போன்றவற்றால் இருதரப்பு உறவு மோசமடைந்தது.

வாஷிங்டனுடனான வர்த்தகச் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண பெய்ஜிங் அண்மையில் ஆர்வம் தெரிவித்தது.

வெள்ளை மாளிகையும் சமாதானப் போக்கைக் கடைப்பிடிப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

இம்மாதப் பிற்பகுதியில் இருநாட்டு அதிபர்களும், அர்ஜென்டினாவில் நடைபெறும் G20 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாட்டிற்கிடையே சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைபேசி உரையாடல் ஆக்ககரமாக அமைந்திருந்ததாய் இரு தலைவர்களும் கூறியிருந்தனர்.

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். 

Top