Images
  • ang san
    (படம்:REUTERS/Kham)

நிருபர்களுக்கான தண்டனையை மியன்மார் தற்காத்ததைக் குறைகூறியது அமெரிக்கா

மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி, ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கும், கருத்துச் சுதந்திரத்துக்கும் தொடர்பில்லை என்று கூறியிருப்பதை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

செய்தியாளர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது. அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

முன்னதாக, வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற உலகப் பொருளியல் மாநாட்டில் கலந்துகொண்டபோது அந்த விவகாரம் குறித்து முதன்முறையாகத் திருவாட்டி சூச்சி பேசினார்.

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அவர் ஆதரித்துக் கருத்துரைத்தார்.
சம்பந்தப்பட்டோர், செய்தியாளர்கள் என்ற காரணத்தால் சிறையிடப்படவில்லை...

மாறாக, அரசாங்க இரகசியச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் முடிவுசெய்ததால்தான் சிறையிடப்பட்டனர் என்றார் திருவாட்டி சூச்சி.

அரசாங்க இரகசியச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகு வா லோனெ, கியாவ் சோ ஓ (Wa Lone, Kyaw Soe Oo) இருவருக்கும் 7 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரக்கைன் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களைக் கொண்ட ஆவணங்கள் இருவரிடத்திலும் இருந்த காரணத்திற்காக அவர்கள் சென்ற ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட செய்தியாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதைத் திருவாட்டி சூச்சி சுட்டினார்.

ரக்கைன் மாநிலத்திலிருந்து ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறிய சம்பவத்தை, மியன்மார் அரசாங்கம் இன்னும் மேம்பட்ட விதத்தில் கையாண்டிருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். 

Top