Images
  • Blood
    கோப்புப் படம்: AFP

ரத்த தானத்துக்குப் பிறகு கையின் செயல்பாட்டை இழந்ததாகக் கூறும் கனடியப் பெண்

கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாநிலத்தைச் சேர்ந்த பெண், ரத்த தானம் செய்ததால் தமது கையின் செயல்பாட்டை இழந்ததாகக் கூறியுள்ளார்.

கேப்ரியெல்லா எக்மென் (Gabriella Ekman) என்ற அந்தப் பெண், 4 ஆண்டுகளுக்கு முன், தமது 17ஆம் வயதில் முதல்முறையாக ரத்த தானம் செய்தார்.

அதன் பிறகு கையின் செயல்பாட்டை இழந்ததாகக் கூறும் அவர், இதுவரை அந்தக் கையின் செயல்பாட்டைத் திரும்பப் பெற முடியவில்லை என்கிறார்.

அதற்கு, நரம்புக்கு பதிலாக ரத்தக்குழாயிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டது காரணமாக இருக்கலாம் எனக் கனடாவின் CTV செய்தி நிறுவனம் கூறியது.

வழக்கமாக, உடலிலிருந்து இதயத்திற்குச் செல்லும் நரம்புகளில் அழுத்தம் அதிகம் இல்லாததால், அத்தகைய நரம்புகளிலிருந்து தான் ரத்தம் எடுக்கப்படும்.

அவரிடமிருந்து ரத்தம் எடுக்கும்போது அங்கிருந்த ஊழியர்கள், அந்த ரத்தத்தில் உயிர்வாயு (Oxygen) அதிகம் இருந்ததாகக் கூறியதாய் எக்மென் சுட்டினார்.

அதனால், அவருக்கு இதயத்திலிருந்து உடலுக்குச் செல்லும் ரத்தக் குழாயிலிருந்து (artery) ரத்தம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரத்த தானம் செய்த சில வாரங்களில், அவரால் தமது கையை நீட்ட முடியாமல்போனது. கை வீங்கியது.

அப்போது தான், ரத்தக் குழாயிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டதை ஒரு மருத்துவர் உறுதி செய்ததாக CTV குறிப்பிட்டது.

இப்போது வரை, அவரால் அந்தக் கையை நீட்ட முடியவில்லை.

ரத்த தானம் செய்வது பிறர் உயிரைக் காப்பாற்றலாம். ஆனால், அது தமது எதிர்காலத்தையே பறித்துவிட்டதாக எக்மென் வருந்துகிறார்.

எனினும், அத்தகைய அசம்பாவிதங்கள் நடப்பது மிகவும் அரிது எனக் கனடிய ரத்தச் சேவைகள் (Canadian Blood Services) தெரிவித்தது.

Top