Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அரிய வகைத் திமிங்கிலத்தை வேட்டையாடிக் கொன்றதற்காக ஐஸ்லந்து மீது குற்றச்சாட்டு

உலகின் ஆகப் பெரிய உயிரினங்களில் ஒன்றான அதை வேட்டையாடுவதில்லை என்று அனைத்துலகத் திமிங்கில வேட்டை ஆணையத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நாடுகள் 1978இல் ஒப்புக்கொண்டன.

வாசிப்புநேரம் -
அரிய வகைத் திமிங்கிலத்தை வேட்டையாடிக் கொன்றதற்காக ஐஸ்லந்து மீது குற்றச்சாட்டு

(படம்: Hard to Port/ Facebook)


ஐஸ்லந்தில் நீலத் திமிங்கில (blue whale) வகையைச் சேர்ந்தது என நம்பப்படும் திமிங்கிலம் ஒன்று வேட்டையாடிக் கொல்லப்பட்டுள்ளது.

உலகின் ஆகப் பெரிய உயிரினங்களில் ஒன்றான அதை வேட்டையாடுவதில்லை என்று அனைத்துலகத் திமிங்கில வேட்டை ஆணையத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நாடுகள் 1978இல் ஒப்புக்கொண்டன.

அவற்றில் ஐஸ்லந்தும் அடங்கும்.

1940களிலிருந்து 1960கள் வரை நீலத் திமிங்கிலம் அருகி வரும் அளவுக்கு வேட்டையாடப்பட்டது இதற்குக் காரணம்.

ஒப்பந்தத்தின்படி ஐஸ்லந்திலும் நீலத் திமிங்கிலத்தை வேட்டையாடிக் கொல்வது சட்டப்படி குற்றம்.

சமர்ப்பிக்கப்பட்ட பட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது கொல்லப்பட்ட விலங்கு நீலத் திமிங்கிலத்தை ஒத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அந்தத் திமிங்கிலம் நீலத் திமிங்கிலத்துக்கும் 'ஃபின்' திமிங்கிலத்துக்கும் (fin whale) இடைப்பட்ட வகையைச் சேர்ந்தது என்று அதை வேட்டையாடிய நிறுவனம் கூறுகிறது.

திமிங்கிலம் கலப்பினத்தைச் சேர்ந்த ஒன்றாகயிருந்தால் நிறுவனத்தின் செயல் சட்டப்படி குற்றமல்ல.

அனைத்துத் திமிங்கிலங்களையும் வேட்டையாடுவதை உலக நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ஆனால் 'ஃபின்' திமிங்கிலங்கள் அருகிவரும் இனமல்ல என்று கருதும் ஐஸ்லந்து அவற்றை வேட்டையாட அனுமதி வழங்கிவருகிறது.

வேட்டைக்காரர்கள் கலப்பினத் திமிங்கிலங்களை 'ஃபின்' திமிங்கிலம் என்று தவறாக நினைத்திருக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

இறந்த திமிங்கிலத்தின் மரபணுவைச் சோதித்து அதன் இனத்தை அடையாளங்காண வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்குக் கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும்.

சம்பவம் குறித்து ஐஸ்லந்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்