Images
  • boeing stops operations (1)
    (படம்: AP Photo/Ted S. Warren)

737 Max ரக விமானங்கள் அனைத்தும் சேவையிலிருந்து முடக்கம்: போயிங் நிறுவனம்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து புதிய தடயங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, போயிங் நிறுவனம் அதன் 737 Max ரக விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து முடக்குவதாக அறிவித்துள்ளது.

அந்த ரகத்தைச் சேர்ந்த அனைத்து 371 விமானங்களையும் சேவையில் இருந்து முடக்குவதாக அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் கூறியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அது குறித்து முன்னதாகப் பேசினார்.

போயிங் 737 MAX 8, MAX 9 ரக விமானங்களையும், அந்த வரிசையுடன் தொடர்புடைய மற்ற விமானங்களையும் சேவையில் இருந்து முடக்குவதற்கு அவசர ஆணை பிறப்பிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் Boeing 737 Max விமானம் ஒன்று, Addis Ababa நகரில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 157 பேரும் மாண்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயங்களும், துணைக்கோளத் தகவல்களும் அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்க முடிவெடுப்பதற்குத் தூண்டியதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

5 மாதங்களில், அந்த ரகத்தைச் சேர்ந்த விமானம் விழுந்து நொறுங்கிய, இரண்டாவது சம்பவம் அது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட முதல் சம்பவத்தில், 189 பேர் மாண்டனர்.

தனது 737 Max ரக விமானங்களின் பாதுகாப்பில் தொடர்ந்து முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக போயிங் நிறுவனம் கூறியது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து 737 Max ரக விமானங்களையும் சேவையில் இருந்து முடக்குவதாக அது தெரிவித்தது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானப் பேரிடர் சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்புகளுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து, போயிங் அவ்வாறு கூறியது.

Top