Images
  • boris
    படம்: AFP

'மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்' - மக்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் வேண்டுகோள்

பிரிட்டனில், பாதுகாப்பு இடைவெளி தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படும்படி, பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள பெரியவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் அந்தத் துணிவுமிக்க முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தடுப்பூசி போடாதவர்கள், இனியும் தாமதிக்காமல் அதைப் போட்டுக்கொள்ளும்படி திரு ஜான்சன் வலியுறுத்தினார். பிரிட்டிஷ் ஊடகங்களில் சில, இன்றைய நாளை, 'சுதந்திர தினம்' என்று வருணித்துள்ளன.

பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதை, திரு ஜான்சன் தற்காத்துப் பேசியுள்ளார்.

இப்போது இல்லாவிட்டால், கிருமி பரவும் சாத்தியம் அதிகமுள்ள இலையுதிர் காலத்திலோ பனிக்காலத்திலோ அதைச் செய்யவேண்டி இருக்கும் என்பதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூர் நேரப்படி, இன்று காலை 7 மணியிலிருந்து, பிரிட்டனில் இரவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. கட்டாயமாக முகக்கவசம் அணிதல், வீட்டிலிருந்து பணிபுரிதல் உள்ளிட்ட சட்டரீதியான விதிமுறைகளும் இன்றிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன. 

Top