Images
  • brazil
    (படம்:AP Photo/Leo Correa)

பிரேசில்: விமானத்தில் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி - தரை, கடல் வழி வந்தால் தடை

பிரேசிலுக்குள் விமானம் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் மீண்டும் வருவதற்கு, அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பிரேசில் அவ்வாறு முடிவெடுத்துள்ளது.

அது நாட்டின் சுற்றுலாத்துறைக்குப் புத்துயிரூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் வருகின்ற பயணிகள் பிரேசிலுக்குள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 69,000-க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுமார் 1,600 பேர் மாண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் என்று பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இணையக் கட்டமைப்பில் கோளாறு இருப்பதால் சா பாலோ மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய விவரத்தைத் தெரிந்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவுக்குப் பிறகு பிரேசில்தான் கிருமித்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் அவதிப்படுகின்றனர். 90,000-க்கும் அதிகமானோர் மாண்டனர். 

Top