Images
  • Breast Implant
    (படம்: REUTERS/Jorge Silva) 

சிலிக்கான் செயற்கை மார்பகச் சிகிச்சை-மறுஆய்வு செய்கிறது அமெரிக்கா


பெண்கள், தங்களது மார்பங்களைச் செயற்கையாக சிலிக்கான் கொண்டு பெரிதாக்கும் சிகிச்சை முறையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யவுள்ளது அமெரிக்கா.

சிலிக்கான் பொருத்தப்படுவதால் அரியவகைச் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகரிப்பதாக சுயேச்சையாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்தது அதற்கு முக்கியக் காரணம்.

ஆய்வின் சில கண்டுபிடிப்புக்களில் நிபுணர்கள் முரண்படுவதால் மறுஆய்வு நடைபெறவுள்ளது.

சுமார் 100,000 பெண்களிடையே 2006ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வந்தது ஆய்வு.

ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 400,000 பெண்கள் சிலிக்கானை மார்பகங்களில் பொருத்திக் கொள்கின்றனர்.

கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் அவற்றை 10 ஆண்டுகளுக்குள் அகற்றிவிடுகின்றனர்.

இந்த வகையான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 75 விழுக்காட்டினர், எடுப்பான தோற்றத்துக்காக சிலிக்கானை மார்பகங்களில் பொருத்துகிறார்கள்.

எஞ்சிய 25 விழுக்காட்டினர் புற்றுநோய்க்குப் பின் மார்பக மறுசீரமைப்புக்காக சிலிக்கானைப் பொருத்துகிறார்கள்.

இந்த அறுவைச் சிகிச்சையினால், அழற்சி, சிராய்ப்பு, சுருக்கங்கள், வீக்கம், வலி, சிலிக்கான் பைகள் உடலுக்குள் வெடிப்பது போன்ற பக்கவிளைவுகள் நேரலாம்.

சிலருக்குப் புற்றுநோய் வரும் சாத்தியமும் சற்றே அதிகரிக்கிறது.

ஆய்வின் முடிவுகள் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை என்று சில மருத்துவர்கள் நம்புகின்றனர்.

எனினும் சிலிக்கான் அறுவை சிகிச்சைக்குப் பிந்திய பக்க விளைவுகளைக் கண்டறிவதில், ஆய்வு குறிப்பிடத்தக்க முயற்சி என்று கூறப்படுகிறது.

 

Top