Images
  • united airlines
    (படம்: AFP)

அமெரிக்க விமானங்கள் சீனாவிற்கான சேவையைத் தொடரப் பெய்ச்சிங் ஒத்துழைக்கவில்லை : வாஷிங்டன்

சீனாவிற்கான விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முட்டுக்கட்டையாய் விளங்குவதாய் அமெரிக்கா சாடியுள்ளது.

மேலும், அமெரிக்காவுக்குச் சேவை வழங்கும் 4 சீன விமான நிறுவனங்கள், திட்டமிடப்பட்ட சேவைகள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரிவிக்கவேண்டும் என்றும் வாஷிங்டன் உத்தரவிட்டுள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், சீன விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை. இருப்பினும் சீனாவுடனான பேச்சில் உடன்பாடு காணப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்த வாரத் தொடக்கத்தில் சீன விமான நிறுவங்களின் தனிப்பட்ட சேவை வழங்கும் விமானங்களுக்கான அனுமதியை அமெரிக்கப் போக்குவரத்துத் துறை தள்ளிப்போட்டது.

Air China, China Eastern Airlines, China Southern Airlines, Hainan Airlines போன்றவை தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சேவை வழங்கிவருகின்றன. இம்மாதம் 27ஆம் தேதிக்குள் திட்டமிடப்பட்டுள்ள விமானச் சேவைகள் குறித்த விவரங்களை அவை சமர்ப்பிக்கவேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் Delta AirLines, United Airlines ஆகியவை ஜூன் மாதம் முதல் சீனாவில் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

கிருமிப் பரவலுக்கு முன் கடந்த ஜனவரி மாதம் வரை, இரு நாடுகளுக்கிடையில் ஒரு மாதத்திற்கு 325 விமானச் சேவைகள் இயங்கிவந்தன.

பிப்ரவரி மத்தியில் அந்த எண்ணிக்கை 20ஆகக் குறைந்தது.  

Top