Images
  • MO FARA
    (படம்: AFP)

ஊக்கமருந்துப் புழக்கத்தின் தொடர்பில் திடல்-தட விளையாட்டாளர்கள் மீது விசாரணை

அனைத்துலக ஒலிம்பிக் குழு, அமெரிக்கப் பயிற்றுவிப்பாளர் அல்பெர்ட்டோ சலஸார் (Alberto Salazar) உடன் தொடர்புடைய திடல்-தட விளையாட்டாளர்கள் அனைவரையும் விசாரிக்கவுள்ளது.

அமெரிக்காவின் ஊக்கமருந்துத் தடுப்பு அமைப்பு சென்ற திங்கட்கிழமை சலஸாருக்கு நாலாண்டுத் தடை விதித்ததையடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

"Endurance training" எனப்படும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்குத் தேவையான அளவு உடலை உறுதிப்படுத்தும் பயிற்சியை வழங்குவதில் சலஸார் நிபுணர்.

Nike Oregon திட்டத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான அவர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துப் புழக்கத்தை ஊக்குவித்ததாக அமெரிக்க அமைப்பு குற்றஞ்சாட்டியது.

இதுவரை அந்தத் திட்டத்தின்கீழ் வரும் எந்த திடல்-தட வீரருக்கும் ஊக்கமருந்துப் பயன்பாட்டுக்காகத் தடை விதிக்கப்பட்டதில்லை.

விளையாட்டாளர்களுக்கான உடைகளை உற்பத்தி செய்யும் Nike நிறுவனம் ஊக்கமருந்துப் பயன்பாட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என்று கூறுகிறது.

சலஸாருக்கு ஆதரவாகவும் அது கருத்துரைத்துள்ளது.

இருப்பினும் அந்த விவகாரம், அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் யாருக்கும் ஊக்கமருந்துக் குற்றங்களில் தொடர்பு உண்டா என்பதை அது தெளிவுபடுத்த விரும்புகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபலத் திடல்-தட வீரர் மோ ஃபாரா (Mo Farah) , 2011 முதல் 2017 வரை சலஸாரிடம் பயிற்சி பெற்றவர். 4 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.

அவரைப் போன்று சலஸாரிடம் பயிற்சி பெற்ற ஒலிம்பிக் வீரர்கள் குறித்த விசாரணை அறிக்கையை, உலக அளவிலான ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பிடம் கோரப்போவதாக அனைத்துலக ஒலிம்பிக் குழு கூறியுள்ளது. 

Top