Images
  • bugs
    (படம்: Reuters)

பூச்சிகளைப் புன்னகையுடன் புசிக்கும் ஆடவர்

நம்மில் பலருக்குப் பூச்சிகள் என்றாலே ஒருவிதமான அருவருப்பு உருவாகும். ஆனால் கோஸ்டா ரிக்காவில் வசிக்கும் உயிரியல் நிபுணர் ஒருவருக்கு பூச்சிகள் அறுசுவை விருந்தாக விளங்குகின்றன.

ஃபேடேரிக்கோ பனியகிவே (Federico Paniagua) என்னும் அந்த நபர், தமது உணவில், விலங்கு இறைச்சியிலிருந்து கிடைக்கும் புரதத்துக்குப் பதிலாகப் பூச்சிகளைச் சேர்த்துக் கொண்டார்.

வெட்டுக்கிளி, கரப்பான்பூச்சி, வண்டு என வகை வகையான பூச்சிகள் இவரது வயிற்றுக்குள் போகின்றன.

தொலைக்காட்சி பார்க்கும்போது, தட்டு நிறைய வறுத்த பூச்சிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக அதை வாய்க்குள் போட்டவாறு சோடாவையும் ஒருமடக்கு குடித்துக்கொள்கிறார் இந்த ஆடவர்.

பூச்சிகள் சாப்பிடச் சுவையாய் இருப்பதாகக் கூறும் அவர், மற்றவர்களையும் பூச்சிகளைச் சாப்பிட ஊக்குவித்து வருகிறார்.

வாணலியில் பூச்சிகளைக் கொட்டி லேசாக எண்ணெய் விட்டு, ஓரளவு உப்பு தூவிப் பொன்னிறமாக வறுத்து எடுக்கிறார் இவரது மனைவி.

கொஞ்சம் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டால் இன்னும் ஜோராக இருக்குமாம் !

உருளைக் கிழங்கு வறுவலெல்லாம் இதற்குமுன் எம்மாத்திரம் என்கிறது இவரது குடும்பம்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு 1,900க்கும் அதிகமான பூச்சி வகைகளை உட்கொள்ளக்கூடியவையாக வகைப்படுத்தியுள்ளது.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பூச்சிகள் அரிய உணவு வகைகளாகக் கருதப்படுகின்றன. அவற்றில் உயிர்ச்சத்து, தாது, சக்தி ஆகியவை அதிகமாய் உள்ளதாகக் கூறப்படுகிறது.

உணவுக்காக, கால்நடைகளை வளர்ப்பதால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் பூச்சிகள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர் பூச்சிப் பிரியர்கள்.  

Top