Images
  • elon musk (1)
    (படம்: Reuters)

சீனாவில் கால்பதிக்கப் போவதை உறுதிசெய்திருக்கும் Tesla நிறுவனர் இலோன் மஸ்க்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

பிரபல தொழிலதிபர் இலோன் மஸ்க் சீனாவில் தற்போதிருப்பதைவிட அதிவேகமாகச் செயல்படக்கூடிய ரயில் கட்டமைப்பை நிறுவும் பணிகளைத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இம்மாதம் நிலத்தடி சுரங்கப்பாதையை அமைக்கும் தமது "The Boring Company" நிறுவனத்தின் கிளையைத் திறக்கவிருப்பதாக அவர் கூறினார்.

அந்தத் தகவலைத் தமது Twitter பக்கம் மூலம் அவர் பகிர்ந்தார்.

இந்த மாதம் ஷங்ஹாயில் நடைபெறும் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு 2019இல் திரு. மஸ்க் கலந்துகொள்ளவிருக்கிறார். அதனை Twitter பக்கத்தில் திரு. இலோன் மஸ்க்கைப் பின்பற்றுபவர் ஒருவர் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த திரு. மஸ்க், மாநாட்டிற்குப் பிறகு, சீனாவில் தனது சுரங்கப்பாதை நிறுவனத்தின் கிளையைத் திறக்கப்போவதாகத் தெரிவித்தார்.

தமது ஓட்டுநரில்லா மின்னியல் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் மூலம் உலகில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தொழிலதிபர் திரு மஸ்க்.

பின் அவரது கார் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. தற்போது, சீனாவில் தொழில் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு, உலகின் கவனத்தை மீண்டும் தம் பக்கம் திருப்பியிருக்கிறார் திரு மஸ்க்.  

Top