Images
  • facebook (1)
    (படம்:Reuters)

"Facebook பயனீட்டாளர்களின் நலனே முக்கியம்"-மார்க் ஸக்கர்பெர்க்

Facebook-கில் எந்தத் தகவல் அதிகமாக முன்னிலைப்படுத்தப்படும் என்பதில் பெரிய மாற்றம் வரவிருக்கிறது.

இனிமேல் வர்த்தகங்கள், வணிகச் சின்னங்கள், ஊடகங்கள்-ஆகியவற்றின் பதிவுகள் முன்னணி இடம்வகிக்க மாட்டா.

மாறாக, பயனீட்டாளரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு இடையே ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிக்கும் பதிவுகள் அதிக முக்கியத்துவம் பெறும் என்று Facebook-கின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

அந்த மாற்றத்தின் காரணமாக, வணிக நிறுவனங்களின் பதிவுக்கான பிரபலம் குறையக்கூடுமென்பதை Facebook ஒப்புக்கொண்டது.

மேலும் பயனீட்டாளர்கள் Facebook-கில் செலவிடும் நேரம் குறையக்கூடும்.

குறைந்த நேரம் செலவிட்டாலும் அது பயனுள்ளதாக இருக்குமென்று திரு. ஸக்கர்பெர்க் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய மாற்றம் அடுத்தடுத்த வாரங்களில் நடப்புக்குவரும்.

வர்த்தக நிறுவனங்களின் பதிவுகளால் தங்கள் சொந்த நண்பர்களின் பதிவுச் சரடு பின்தள்ளப்படுவதாகப் பயனீட்டாளர்கள் கருத்துக் கூறியிருப்பதைத் திரு. ஸக்கர்பெர்க் சுட்டினார்.

Facebook பயனீட்டாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதைத் தாமும் தமது குழுவினரும் உணர்வதாக அவர் சொன்னார்.

குடும்பத்தாரும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் வகையில் நெருக்கமாக இருந்து தனிமையில் இருக்கிறோம் என்பதைத் தவிர்ப்பதே Facebook-கின் முதன்மை நோக்கம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பொதுவான உள்ளடக்கம் ஒன்று Facebook-கில் முன்னிலை பெற வேண்டுமானால், அது சமூகப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.

அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் விவாதிக்கும் குழுக்களைத் திரு. ஸக்கர்பெர்க் சுட்டினார்.

உலக நாடுகளின் அரசாங்கங்களிடம் இருந்து Facebook-கைத் தற்காக்கவும் அவர் உறுதிகூறினார்.

ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைத் திரிக்க முயன்றதாகக் கவனிப்பாளர்கள் அண்மையில் கூறியிருந்தனர்.


 

Top