Images
  • fruit

பிரான்ஸ்: அடுத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொட்டலத்தில் காய்கறி, பழங்களை விற்கத் தடை

பிரான்சில் அடுத்த ஆண்டிலிருந்து காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் பொட்டலங்களில் விற்கத் தடை விதிக்கப்படவுள்ளது.

வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து, பிளாஸ்டிக் உறையின்றி விற்கப்படவேண்டிய சுமார் 30 காய்கறி, பழங்களின் பட்டியலையும் பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் தக்காளி, ஆப்பிள், வாழை, ஆரஞ்சு முதலியவை உள்ளன.

அந்நாட்டில் விற்கப்படும் காய்கறி, பழங்களில் 37 விழுக்காடு பிளாஸ்டிக் பொட்டலங்களில் வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 1 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொட்டலப் பொருள்களைத் தவிர்க்கலாம் என்று அந்நாட்டின் சுற்றுப்புற அமைச்சு விளக்கியது.

பிரான்சில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிடும் திட்டத்தில், அதுவும் ஓர் அம்சம்.

இவ்வாண்டிலிருந்து பிரான்சில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உறிஞ்சு குழல்கள், குவளைகள், கரண்டிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.  

Top