Images
  • google
    (படம்: REUTERS/Arnd Wiegmann)

Google, Facebook போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 3% சேவை வரி விதிக்கும் மசோதா-பிரான்ஸ் நிறைவேற்றியது

Google, Facebook போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கும் மின்னிலக்கச் சேவைக்கு, 3 விழுக்காடு வரி விதிக்கும் மசோதாவை, பிரெஞ்ச் செனட் அங்கீகரித்துள்ளது.

அமெரிக்க அச்சுறுத்தலையும் மீறி, அந்த மசோதா செனட்டில் அங்கீகரிக்கப்பட்டது.

முன்னதாக, பிரெஞ்சு நாடாளுமன்றம் (National Assembly) அதை அங்கீகரித்தது.

அந்த உத்தேச வரி மசோதா, அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நியாயமற்ற வகையில் குறிவைப்பதாக, வாஷிங்டன் வாதிட்டு வந்தது. ஆனால், அதை பிரெஞ்சு அரசாங்கம் நிராகரித்தது.

அத்தகைய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரான்சுக்கு வெளியே தலைமையகம் அமைத்து மிகக் குறைவான வரி செலுத்துகின்றன அல்லது வரியே செலுத்துவதில்லை என்பதை அது சுட்டிக்காட்டியது.

புதிய வரி விதிப்பின்படி, பிரான்ஸில் குறைந்தது 25 மில்லியன் யூரோ வருமானம் ஈட்டி, 750 மில்லியன் யூரோவுக்கு மேல் மொத்த வருமானம் ஈட்டும் எந்தவொரு மின்னிலக்க நிறுவனமும் பிரான்சுக்கு வரி கட்டவேண்டும்.

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வரி கணக்கிடப்படும். அதன் மூலம், பிரான்ஸுக்கு இந்த ஆண்டு 400 மில்லியன் யூரோ வருமானம் கிடைக்குமென மதிப்பிடப்படுகிறது.

பிரான்சின் அண்மை முடிவு குறித்து விசாரிக்க, அமெரிக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவில், பிரெஞ்சு நிறுவனங்கள் மீது பதிலுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை அறிமுகமாகலாம்.  

Top