Images
  • google
    (கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo) 

ஆஸ்திரேலியாவில் செய்தி இணையவாசல்களை உள்ளூர்த் தேடல்களிலிருந்து மறைக்கும் கூகள்

ஆஸ்திரேலியாவில், உள்ளூர்ச் செய்தி இணையவாசல்களைக் குறிப்பிட்ட சில இணையவாசிகளிடமிருந்து கூகள் நிறுவனம் மறைத்துள்ளது.

செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளைப் பகிரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்குக் கட்டணம் செலுத்தவேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்திவரும் வேளையில், அந்த நடவடிக்கை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

Google Search அம்சம் பயன்படுத்தப்படும்போது, Guardian Australia, News Corp செய்திகள் உள்ளிட்ட ஊடகங்களின் இணையவாசல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அது, ஆஸ்திரேலியாவின் Google Search பயனீட்டாளர்களில் ஒரு விழுக்காட்டினரை பாதித்துள்ளது.

சோதனை நடவடிக்கையில், ஊடக நிறுவனங்கள் வழி Google Search அம்சத்திற்கு ஏற்படும் தாக்கமும் Google Search அம்சம் வழி ஊடக நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கமும் ஆராயப்படுகிறது.

2018-ஆம் ஆண்டில், Google Search அம்சம் வழியாகப் பகிரப்பட்ட தகவல்கள் மூலம், ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்கள் 169 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதை, கூகள் சுட்டியது.

ஊடகங்கள் வழங்கும் தகவலுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு வகைசெய்யும் சட்டத்தை, ஆஸ்திரேலியா இவ்வாண்டு அமல்படுத்தவுள்ளது.

அது நடப்புக்கு வந்தால், அத்தகைய சட்டத்தைக் கொண்டுவரும் முதல் நாடாக ஆஸ்திரேலியா விளங்கும்.

சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆஸ்திரேலியர்கள் கூகளைப் பயன்படுத்தும் விதமே மாற நேரிடும் என்று கூகள் எச்சரித்தது.

அவ்வாறு நேர்ந்தால், ஊடகங்கள் தங்களுடைய செய்திகளை Facebook-இல் பகிர்ந்துகொள்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று Facebook மிரட்டல் விடுத்துள்ளது.  

Top