Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நெருப்பு தின்று தீர்த்த மரபுடைமைச் செல்வங்கள்

UNESCO மரபுடைமைத் தலமான பாரிஸின் Notre Dame தேவாலயம் பெருந் தீயால் சேதமடைந்தது உலகெங்கும் பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
நெருப்பு தின்று தீர்த்த மரபுடைமைச் செல்வங்கள்

படங்கள்: Wikimedia Commons

UNESCO மரபுடைமைத் தலமான பாரிஸின் Notre Dame தேவாலயம் பெருந் தீயால் சேதமடைந்தது உலகெங்கும் பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

850 ஆண்டுகால மரபுடைமைச் சின்னத்தை மறுசீரமைத்தாலும் இனி அதே பாரம்பரியப் பழமையுடன் அதனைப் பார்க்க இயலாது.

இதற்கு முன்னரும் சில மரபுடைமைத் தலங்கள் தீ விபத்துகளில்  பாதிக்கப்பட்டதுண்டு.

அவற்றில் சில முற்றிலும் அழிந்துபோயின.

யார்க் தேவாலயம்

1984ஆம் ஆண்டு ஜுலை 9ஆம் தேதி மூண்ட தீயில் இங்கிலாந்தின் யார்க் தேவாலயத்துக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டது.

15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்தத் தேவாலயக் கூரை உள்ளிட்ட பகுதிகள் தீக்கிரையாயின. மின்னல் தாக்கியதால் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.

தீயின் வெம்மை தாங்காமல், 16ஆம் நூற்றாண்டில் அந்தத் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட பிரபல Rose சன்னல் சுக்கு நூறானது.

இருப்பினும், மிகுந்த சிரமத்துக்குப் பின் அந்தச் சன்னல் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

1988ஆம் ஆண்டு சுமார் ஆறரை மில்லியன் டாலர் செலவில் அந்த தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது.

பிரேசில் தேசிய அரும்பொருளகம்

பிரேசில் அரும்பொருளகத்தில், சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இரவில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

லத்தீன் அமெரிக்காவின் ஆகப் பெரிய வரலாற்று அரும்பொருளகமான அங்கு, 20 மில்லியனுக்கும் அதிகமான கலைப்பொருள்கள் இருந்தன. 

தொல்லியல் பிரிவில் 26ஆயிரத்துக்கும் அதிகமான தொல்-படிமங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. டைனோசர் எலும்புக்கூடும் அதில் அடங்கும்.

தீ விபத்தில் பல்வேறு அரிய சேகரிப்புகள் அழிந்தன.

வெனிஸ் ஓப்ரா ஹவுஸ்

1996 ஆம் ஆண்டில் வெனிஸில் உள்ள லா ஃபெனிஸ் ஓப்ரா ஹவுஸில் தீ விபத்து ஏற்பட்டது. உலகின் அதியற்புதமான ஒலித்தரமுள்ள இசையரங்குகளில் ஒன்றான லா ஃபெனிஸ் 1792 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தீ விபத்தின் தொடர்பில், மின்சார ஊழியர்கள் இருவருக்கு முறையே ஆறு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் தங்கள் வேலையில் கவனக்குறைவாய் இருந்ததற்காக அந்தத் தண்டனை. லா ஃபெனிஸ் ஓப்ரா ஹவுஸ் 2004 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.

பார்சலோனா ஓப்ரா ஹவுஸ்

உலகப் புகழ் பெற்ற பார்சலோனா ஓப்ரா ஹவுஸில் 1994 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்பெயினின் கலாசாரப் பொக்கிஷங்களில் ஒன்று 150 ஆண்டு பழமையான அந்த இசையரங்கு. தீ விபத்தில் அதன் பெரும்பகுதி எரிந்து நாசமானது. தற்போது, பார்சலோனா ஓப்ரா ஹவுஸ் மறுசீரமைக்கப்பட்டு விட்டது.

விண்ட்ஸர் கேஸல் (அ) விண்ட்ஸர் அரண்மனை.

1992, நவம்பர் 20 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கு லண்டனில் உள்ள விண்ட்ஸர் கேஸலின் வடகிழக்குப் பகுதி எரிந்து அழிந்தது. அதன் ஒரு பகுதி பிரிட்டிஷ் மகாராணியின் வார இறுதி ஓய்வில்லமாக இருந்தது.

அங்கிருந்த ஒன்பது அறைகள் தீயில் நாசமாயின. வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, பட ஒளிபரப்புக் கருவிக்கு (projector) அருகே இருந்த திரைச்சீலையில் தீப்பிடித்தது.

விறுவிறுவெனப் பற்றிப் பரவிய நெருப்பை அணைக்க  தீயணைப்பாளர்கள் 250 பேர் 15 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. தீயை அணைப்பதற்காகச் சுமார் ஆறரை மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

ஐந்து ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு விண்ட்ஸர் அரண்மனை பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

போஸ்னியா தேசிய நூலகம்

19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஸ்னியா தேசிய நூலகம் 1992ஆம் ஆண்டு நாசமானது.

செர்பியப் படையினர் மூன்றரை ஆண்டுகளாக செரஜாவ் நகரை முற்றுகையிட்டிருந்தனர்.

1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 - 26 ஆம் தேதி இரவில் நூலகம் கொளுத்தப்பட்டது. இரண்டு மில்லியன் புத்தகங்கள், பழங்காலச் சுவடிகள், படங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியோடு 1996 ஆம் ஆண்டு போஸ்னியா நூலகத்தைச் சீரமைக்கும்பணி தொடங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு புதிய நூலகம் திறக்கப்பட்டது.

ஜெனிவா கிராண்ட் தியேட்டர்

சுவிட்சர்லந்தில் உள்ள ஜெனிவா கிராண்ட் தியேட்டர் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது, 1951 ஆம் ஆண்டு, ரிச்சர்ட் வானேரின் The Valkyrie நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகளின்போது ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்து போனது. மறுசீரமைக்கப்பட்ட பிறகு 1962 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது ஜெனிவா கிராண்ட் தியேட்டர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்