Images
  • Howard Durdle
    (படம்: Howard Durdle/ Facebook) 

மாண்ட வாடிக்கையாளருக்குக் கடுமையாகக் கடிதம் எழுதிய PayPal

புற்றுநோயால் மாண்ட ஒரு பெண்ணுக்கு, அவரின் மரணம் தனது விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அதன் விளைவாக தான் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்தப் பெண்ணுக்கு PayPal கடிதம் எழுதியுள்ளது.

மனத்தைப் புண்படுத்தக்கூடிய அந்தக் கடிதத்தை அனுப்பியதற்காக பெண்ணின் கணவரிடம் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

எப்படி அத்தகைய கடிதம் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் அது விசாரித்து வருகிறது.

தானியக்கக் கடிதங்கள் எவ்வாறு மனவுளைச்சலை ஏற்படுத்துகின்றன என்பதை நிறுவனங்களுக்கு உணர்த்த சம்பவம் குறித்துத் தெரிவிக்க தான் முன்வந்ததாக பெண்ணின் கணவன் கூறினார்.

லிண்ட்ஸே டர்டல் (Lindsay Durdle) எனும் அந்தப் பெண் மே 31 அன்று இறந்தார். அவருக்கு வயது 37.

பெண்ணின் மரணம் குறித்து அவரது கணவர் மூன்று வாரங்களுக்கு முன் PayPal நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் கடிதம் பெண்ணின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

பெண்ணின் இறப்பைப் பற்றி அறிவதாகவும் அது தனது விதிகளை மீறுவதாகவும் அந்தக் கடிதத்தில் Paypal குறிப்பிட்டிருந்தது.


சம்பவத்தை விசாரித்து வரும் வேளையில், இறந்த பெண் தனக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை அது ரத்து செய்துள்ளது.

சம்பவத்திற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று நிறுவனத்தின் ஊழியர் தன்னிடம் கூறியதாக பெண்ணின் கணவர் தெரிவித்தார்.

இயந்திரக் கோளாறு, தவறான கடித மாதிரி, மனிதத் தவறு ஆகியவை அம்மூன்று காரணங்கள்.
 

Top