Images
  • hack

இஸ்ரேலிய நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி செய்தியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோரின் திறன்பேசிகள் ஊடுருவல்: ராய்ட்டர்ஸ்

உலகெங்கும் உள்ள செய்தியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்களுடைய 37 திறன்பேசிகளை ஊடுருவ, இஸ்ரேலைச் சேர்ந்த வேவுபார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவற்றில், சில ஊடுருவல் முயற்சிகள் வெற்றி பெற்றதாக, 17 ஊடக நிறுவனங்கள் தெரிவித்தன.

இஸ்ரேலைச் சேர்ந்த NSO Group என்னும் நிறுவனம், அந்த வேவு மென்பொருளை உருவாக்கியதாக, Washington Post நாளேடு குறிப்பிட்டது.

துருக்கியில் கொலையுண்ட பத்திரிகையாளர் ஜமால் காஷோகிக்கு (Jamal Khashoggi) நெருக்கமான இரண்டு பெண்களின் திறன்பேசிகளும் வேவு பார்க்கப்பட்டதாக அது தெரிவித்தது.

திறன்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள், நிழற்படங்கள், மின்னஞ்சல்களை அந்த வேவு மென்பொருளால் பெறமுடியுமென, The Guardian இணையத்தளம் குறிப்பிட்டது.

மேலும், தொலைபேசி அழைப்புகளை அதனால் பதிவு செய்யமுடியும் என்றும், திறன்பேசியிலுள்ள ஒலிவாங்கியைத் தொலைவிலிருந்தே ரகசியமாக முடுக்கிவிட முடியுமென்றும் அது தெரிவித்தது.

யாரால், எதற்காக அந்த ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை என, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

பயங்கரவாதத்தையும் குற்றச்செயல்களையும் எதிர்த்துப் போராட, அரசாங்க வேவுத் துறையாலும் சட்ட அமலாக்கத் துறையாலும் பயன்படுத்தப்படுவதற்காக மட்டுமே, தனது மென்பொருள் உருவாக்கப்பட்டதாக, NSO நிறுவனம் தெரிவித்தது.

ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட தகவலை, அது மறுத்துள்ளது.  

Top