Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இடுகாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்

இத்தாலியில், இடுகாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோகிராம் போதைப்பொருளைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
இடுகாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்

படம்: PIXABAY

இத்தாலியில், இடுகாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோகிராம் போதைப்பொருளைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதன் தொடர்பில், 42 வயது ஆடவர் ஒருவரை அவர்கள் கைது செய்தனர்.

ரோம் நகரிலுள்ள வெரானோ (Verano) கல்லறை வளாகத்திலுள்ள இரண்டு கல்லறை மாடங்களில் இருந்து போதைப் பொருளும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

கார் ஒன்று, கல்லறை வளாகத்துக்குள் வேகமாக நுழைவதைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் அதைப் பின்தொடர்ந்தனர்.

அந்தக் காரின் ஓட்டுநர், ஆளரவமற்ற பகுதியில் இருந்த கல்லறைப் பலகை ஒன்றை அகற்றி ஏதோ செய்வதைப் பார்த்த அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

கல்லறை மாடத்துக்குள் 1.092 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு அருகிலிருந்த மற்றொரு கல்லறை மாடத்தின் பெயர்ப் பலகை பெயர்ந்திருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதையும் சோதனையிட்டனர்.

அதில், ஒரு கைத்துப்பாக்கியும் மற்ற சில ஆயுதங்களும் இருந்தன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ரோம் நகரில் வசிப்பவர் என்றும் அவர் கல்லறை மாடங்களுக்குப் பளிங்குப் பலகை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல்-ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்