Images
  • cannabis
    (படம்: Reuters)

ஹவாயி: குறைந்த அளவு கஞ்சா வைத்திருப்பது சட்டவிரோதமல்ல

அமெரிக்காவின் ஹவாயி மாநிலம், குறைந்த அளவு கஞ்சா வைத்திருப்பது சட்டவிரோதமல்ல என்று அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஹவாயி மாநிலத்தில் எவரேனும் குறைந்த அளவு கஞ்சா வைத்திருந்தாலும் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனையும், ஆயிரம் டாலர் வரை அபராதமும் விதிக்க சட்டம் அனுமதித்தது.

அந்தச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. புதிய விதியின் கீழ், ஒருவர் அதிகபட்சம் மூன்று கிராம் வரை கஞ்சா வைத்திருந்தால் அவருக்கு 130 டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹவாயி மாநிலம். அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2020 ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

ஹவாயி தவிர அமெரிக்காவிலுள்ள மேலும் 24 மாநிலங்கள் குறைந்த அளவு கஞ்சா வைத்துக்கொள்வதற்கு ஏற்கனவே அனுமதியளித்துள்ளன.

  

Top