Images
  • turkish pm
    (படம்: REUTERS/Umit Bektas)

செய்தியாளர் கஷோகி கொலை: ஒலிப்பதிவுகளை சவுதி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்திருக்கிறது துருக்கி

சவுதி அரேபியச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் (Jamal Khashoggi) கொலை தொடர்பான ஒலிப்பதிவுகளை சவுதி அரேபியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றிடம் அளித்திருப்பதாகத் துருக்கி தெரிவித்துள்ளது.

திரு கஷோகி மரணம் தொடர்பில் சவுதி அரேபியா மீது, அனைத்துலக அளவில் நெருக்குதலை அதிகரிப்பது நோக்கம் என துருக்கிய அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறினார்.

ஒலிப்பதிவுகளைப் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் கேட்டுவிட்டனர் என்றும், அந்த விவகாரத்தைத் திரித்து பேசுவதற்கான தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

கடந்த மாதம், சில ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள திரு கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச் சென்றார்.

உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை.

அப்போதிருந்து அவரையோ, அவரது சடலத்தையோ காணவில்லை.

திரு கஷோகி, சவுதி அரேபிய அரச குடும்பத்தை அதிகம் விமர்சித்தவர்.

அவர் கொலை செய்யப்பட்டதை சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.

ஆனால் கொலைக்கும் அரச குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அது தெரிவித்துள்ளது.  

Top