Images
  • lead
    (படம்: REUTERS/Adnan Abidi)

மூன்றில் ஒரு குழந்தை நச்சுத்தன்மை கொண்ட ஈயத்தால் பாதிப்பு?

மூன்றில் ஒரு குழந்தை நச்சுத்தன்மை கொண்ட ஈயத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.

உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அது தெரியவந்தது.

பிள்ளைகள் அதனால், குணப்படுத்த முடியாத தீங்குகளுக்கு ஆளாகியிருப்பதாக ஆய்வு குறிப்பிட்டது.

பெரும்பாலும் வசதிகுறைந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 மில்லியன் குழந்தைகள் அவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று UNICEF, Pure Earth ஆகிய அமைப்புகள் தெரிவித்தன.

அவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் தெற்கு ஆசியாவில் வசிப்பவர்கள் என்று BBC செய்தி நிறுவனம் கூறியது.

2000ஆம் ஆண்டுக்குப் பிறகு வசதிகுறைந்த நாடுகளில் வாகன எண்ணிக்கை மும்மடங்காகியுள்ளது.

அதனையடுத்து, பாதுகாப்பற்ற முறையில், சட்டவிரோதமாக, வாகன மின்கலங்கள் மறுபயனீடு செய்யப்படுகின்றன. அந்நாடுகளில் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு அதுவே காரணம் என்று BBC கூறியது.

உலகின் சுமார் 85 விழுக்காட்டு ஈயம் மின்கலங்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மின்கலங்களில் பெரும்பாலானவை மறுபயனீடு செய்யப்படுகின்றன.

அவற்றை உடைக்கும்போது, உள்ளிருந்து அமிலம், ஈயம், தூசி ஆகியவை வெளியாகின்றன.

அவை காற்றிலோ மண்ணிலோ தண்ணீரிலோ கலக்க வாய்ப்பு உண்டு.

உடல் எடை விகித அடிப்படையில் ஒப்புநோக்கினால், குழந்தைகள் பெரியவர்களைவிட 5 மடங்கு வரை அதிகக் காற்று, உணவு, தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்கிறார்களாம்.

அப்படியானால், அவர்கள் நச்சு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கின்றார்கள்.

5 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் மூளை முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்பே ஈயத்தால் பாதிக்கப்படலாம்.

அது அவர்களின் அறிவாற்றல், உடல்கூறு ஆகியவற்றில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

Top